அவர்களை மன்னியுங்கள்; அணியைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்: விராட் கோலிக்கு ராகுல் காந்தி ஆதரவு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
Updated on
2 min read

வெறுப்பால் நிரப்பப்பட்டவர்களை, இந்த மக்களை மன்னியுங்கள். அணியைப் பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர்-12 சுற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், நியூஸிலாந்திடமும் தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து, கேப்டன் கோலி மீதும், அணி வீரர்கள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்திய அணியைப் பற்றிப் புதுப்புது தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன.

இந்திய அணி நிர்வாகம் எடுத்த முடிவுகள், கோலியின் கேப்டன்ஷிப், தோல்விகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், சர்வதேச அளவில் பல வீரர்களும் விமர்சனங்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். இது இந்திய அணியின் தார்மீக நம்பிக்கையைக் குலைத்துவிடும் வகையில் இருக்கிறது. இது தவிர சமூக ஊடகங்களிலும் இந்திய அணியைப் பற்றி விமர்சிப்பதும், கிண்டல் செய்வதும் தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபின் வேகப்பந்துவீச்சாளர் ஷமிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. முகமது ஷமி குறித்தும், அவரின் குடும்பத்தார், மதம் குறித்தும் அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த கேப்டன் கோலி, “ஷமியை மதரீதியாக விமர்சித்தவர்கள், தாக்கியவர்கள் விரும்பினால் இன்னும் வேண்டுமானால் அதிக பலத்துடன் வரட்டும். எங்கள் அணியில் உள்ள சகோதரத்துவம், நட்பு, எதையும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்திய அணியின் கேப்டனாக உறுதி கூறுகிறேன், அணிக்குள் நாங்கள் உருவாக்கியுள்ள கலாச்சாரத்தை இதுபோன்ற விஷயங்கள் .0001 சதவீதம் கூட ஊடுருவ முடியாது. இதற்கு முழுமையாக உத்தரவாதம் அளிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற விளக்கத்தை அளித்ததன் மூலம் கேப்டன் விராட் கோலி கடுமையான அழுத்தத்துக்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது தெரியவருகிறது. இந்த டி20 உலகக் கோப்பை போட்டித் தொடருடன் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகும் சூழலில் இந்தத் தோல்விகள் அவருக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ட்விட்டர் வாயிலாக கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “அன்பு விராட், இந்த மக்கள் எல்லாம் வெறுப்பால் நிரப்பப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு யாரும் அன்பைக் கொடுக்கவில்லை. இவர்களை மன்னித்துவிடுங்கள். இந்திய அணியைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in