

டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் முடிந்தபின் நியூஸிலாந்து அணியுடன் நடக்கும் 3 டி20 போட்டித் தொடருக்கு இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகக் கோப்பை போட்டித் தொடர் முடிந்தபின் இந்தியா வரும் நியூஸிலாந்து அணி நவம்பர் 17-ம் தேதி முதல் 3 டி20 போட்டித் தொடர், 2 (நவ.25-29ஆம் தேதி, டிச.3-7 2-வது டெஸ்ட்) டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்தத் தொடருக்கு, இந்திய அணியில் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹி்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்பதால் இந்திய அணியை ராகுல் வழிநடத்த வாய்ப்பு தரப்படலாம்.
இந்த டி20 உலகக் கோப்பை போட்டித் தொடருடன் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இதனால் கேப்டன் பதவிக்கு ரோஹித் சர்மா நியமிக்கப்படலாம் என்று அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியானாலும் பிசிசிஐ தரப்பில் இதுவரை ஏதும் கூறப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து தொடரிலிருந்து ஓய்வில்லாமல் ரோஹித் சர்மா விளையாடிவருவதால் நியூஸிலாந்து தொடருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “அடுத்த ஆண்டில் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டித் தொடர் பெரும்பாலும் இல்லை. பிப்ரவரி மாதம் மே.இ.தீவுகள் அணியுடன் மட்டுமே இருக்கிறது. ஆதலால், ஒருநாள் அணிக்கு கேப்டன் பதவிக்கு கோலி நீடிப்பதில் சந்தேகம் இருக்கிறது.
2023-ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பை போட்டிக்கு அணியை வழிநடத்திச் செல்லத் தகுதியான நபரை பிசிசிஐ தேடி வருகிறது. அதுகுறித்து பிசிசிஐ தலைவர், செயலாளர் அடுத்த சில நாட்களில் நடக்க இருக்கும் தேர்வுக்குழுக் கூட்டத்தில் ஆலோசிப்பார்கள்.
3 ஒருநாள் போட்டிகள் மட்டுமே இந்திய அணி அடுத்த ஆண்டு விளையாடுவதால் இந்த 3 போட்டிகளுக்காக மட்டும் தனியாக ஒரு கேப்டன் தேவையில்லை. 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தியாவில் இந்திய அணி 17 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 அணிக்கு கேப்டனாக இருப்பவரே ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக இருக்கலாம்.
முதலில் நியூஸிலாந்து தொடருக்கான இந்திய வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம். ரோஹித் சர்மா ஓய்வு குறித்து ஏதும் பேசவில்லை, அணியை வழிநடத்தவில்லை என்று ஏதும் கூறவில்லை. ஒருவேளை ரோஹித் ஓய்வு எடுத்தால் ராகுல் கேப்டன் பதவியை ஏற்பார். டெஸ்ட் போட்டியின்போது ரோஹித் ஓய்வு எடுத்தால் டி20 போட்டிக்கு அவர் தலைமை தாங்கலாம்.
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் நீக்கப்படலாம். ஹர்திக் உடற்தகுதியின்றி இருக்கிறார், புவனேஷ்வர் ஃபார்மின்றித் தவிக்கிறார். இவர்களுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் பர்ப்பிள் தொப்பி வென்ற ஆவேஷ்கான் சேர்க்கப்படலாம்.
டி20 தொடரில் ஆட்டத்தைத் தொடங்க ருதுராஜ் கெய்க்வாட் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும். ஹர்திக் பாண்டியா இடத்துக்கு வெங்கடேஷ் அய்யர் கொண்டுவரப்படலாம். யஜுவேந்திர சஹல் மீண்டும் அணிக்குள் வரலாம்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியைக் கருத்தில் கொண்டு உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுக் களமிறக்கப்படலாம். இது தவிர அக்ஸர் படேல், ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் சஹர் ஆகியோர் டி20 தொடருக்கும், டெஸ்ட் தொடருக்கு ஷுப்மான் கில், மயங்க் அகர்வால், உமேஷ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படலாம்” எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.