

இரினா ஷயக்
ரஷ்ய மாடலான இரினா, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலி. உலகின் செக்ஸியான பெண் என்று மேற்கத்திய பத்திரிகைகளால் வர்ணிக்கப்படும் இவர், இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆடும் வீரர்களின் காதலிகளில் நம்பர் ஒன்னாக கால்பந்து ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2010ம் ஆண்டு ரொனால்டோவின் வாழ்க்கையில் நுழைந்த இவர் அன்றிலிருந்து மைதானத்துக்கு வெளியில் தன் காதலரைப் பிரியாமல் அவருடன் சுற்றிக்கொண்டிருக்கிறார். உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீரரை காதலித்தாலும் தனக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இல்லை என்று கூறும் இரினா, இப்போது தனது ஊரில் ஒரு மகப்பேறு மருத்துவமனையைக் கட்டுவதற்காக நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்.
ஷகிரா
இவருக்கு அறிமுகம் தேவையில்லை. புகழ்பெற்ற பாப் பாடகியான இவர் கடந்த உலகக் கோப்பை போட்டியின்போது ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதன் படப்பிடிப்பின்போது ஸ்பெயின் வீரர் கெரார்ட் பிக்கை சந்தித்து அவர் மீது காதல் கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக இணைந்திருக்கும் இந்த ஜோடி ஸ்பெயினில் முக்கியமான ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையின்போது பிரேசிலுக்கு ஷகிரா சென்றால் கெரார்ட் பிக்கின் கவனம் சிதறக்கூடும் என்று பயந்த ஸ்பெயின் அணி நிர்வாகம், அவரை பிரேசிலுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை மறுக்கும் ஷகிரா, தனக்கு பிரேசிலுக்கு செல்லும் எண்ணம் இல்லை என்கிறார்.
ஆன்டோனெல்லா ரொகுசோ
அர்ஜென்டீனா வீரர் லயொனல் மெஸ்ஸிக்கும், ஆன்டோனெல்லா ரொகுசோவுக்கும் இடையிலான காதலை தெய்வீக காதல் என்றே சொல்லலாம். இவர்கள் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு அவர்களின் ஐந்தாவது வயதில் நிகழ்ந்திருக்கிறது. இருவரின் குடும்பமும் நட்பாக பழக, அந்த நட்பு மெஸ்ஸிக்கும் ஆன்டோனெல்லாவுக்கும் இடையே காதலை மலரச் செய்துள்ளது. ஒரு சில காரணங்களுக்காக சிறு வயதில் மெஸ்ஸி ஐரோப்பாவுக்கு சென்றபோதும் அவருக்குள் ஆன்டோனெல்லாவின் நினைவு மறையாமல் வளர்ந்தது.
2008ம் ஆண்டு தங்கள் காதலை பகிரங்கமாக வெளிப்படுத்திய இந்த ஜோடிக்கு 2012ம் ஆண்டில் ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் இன்னும் இவர்களுக்கு திருமணமாகவில்லை. இந்த உலகக் கோப்பை முடிந்ததும் தங்கள் திருமணத்தை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.
சாரா கார்பனேரோ
ஸ்பெயின் அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான இகெர் காசில்லஸ்ஸின் காதலியான இவர் ஒரு தொலைக்காட்சி நிருபர். கடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது, உலகின் அழகான பெண் நிருபர் என்று அமெரிக்க பத்திரிகைகளால் பாராட்டப்பட்டவர்.
அதே நேரத்தில் 2010ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியிடம் ஸ்பெயின் தோற்றதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அந்த போட்டியின்போது மைதானத்தில் ஒரு நிருபராக சாரா வீற்றிருக்க அவரையே கவனித்துக்கொண்டிருந்த காசில்லஸ் எதிரணி கோல் அடிப்பதை தடுக்கத் தவறினாராம். இந்த விமர்சனங்களைப் புறம் தள்ளிய காசில்லஸ், 2010ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதும், சாராவை முத்தமிட்டு தன் காதலை பகிரங்கப் படுத்தினார். இப்போது இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையையும் பெற்றுள்ளனர்.
காப்ரியல்லா லென்சி
உலகில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கெல்லாம் பிரேசில் வீரர் நெய்மரைப் பிடிக்கும். ஆனால் அவருக்கு பிடித்தவர் 20 வயது மாடல் அழகியான காப்ரியல்லா லென்ஸிதான். இவர்கள் இருவரும் காதலிப்பதாக பிரேசிலில் கிசுகிசுக்கள் வந்தாலும் பத்திரிகைகளுக்கு பயந்தோ என்னவோ இவர்கள் பிரேசிலில் ஒன்றாகச் சுற்றுவதில்லை. ஆனால் நெய்மர் கிளப் கால்பந்து ஆடுவதற்காக வெளிநாடு செல்லும்போதெல்லாம், லென்சியும் அவரைப் பின்தொடர்ந்து போவதாகவும், வெளியூரில் ஒன்றாகச் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.