Published : 02 Nov 2021 12:10 PM
Last Updated : 02 Nov 2021 12:10 PM

கோலி, ரவி சாஸ்திரி பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்துவிட்டு பும்ராவை அனுப்பியது எந்தவிதத்தில் நியாயம்?- அசாருதீன் கேள்வி

இந்திய அணியின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி | கோப்புப் படம்.

புதுடெல்லி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்குப் பின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் பத்திரிகையாளர்களை முறைப்படி சந்திக்காமல், பும்ராவை அனுப்பியது சரியல்ல. இது எந்தவிதத்தில் நியாயம் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

துபாயில் நேற்று முன்தினம் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் நியூஸிலாந்து வென்றுவிட்டால் அரையிறுதி ஏறக்குறைய உறுதியாகிவிடும்.

அதேசமயம், இந்திய அணியைத் தாயகத்துக்கு டிக்கெட் போட வைத்துள்ளது வில்லியம்ஸன் படை. இந்திய அணிக்கு அடுத்து 3 போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது.

இந்தத் தோல்விக்குப் பின் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காணொலி வாயிலாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். ஆனால், முறைப்படி கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான் பேட்டி அளித்து தோல்விக்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். ஆனால், பும்ரா வந்து பேட்டி அளித்தார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முகமது அசாருதீன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''என்னைப் பொறுத்தவரை டி20 உலகக் கோப்பை போட்டியில் முக்கியமான ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது. இந்தத் தோல்விக்கு விளக்கம் அளிக்கப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் விராட் கோலியும்தான் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும். ஆனால், ஜஸ்பிரித் பும்ராவைச் சந்திக்க வைத்தது ஏற்க முடியாதது. அது எந்த விதத்தில் நியாயமாகும்?

கேப்டன் கோலி பத்திரிகையாளர்களைச் சந்திக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சந்தித்திருக்க வேண்டும். பயிற்சியாளர் அல்லது கேப்டன் இருவரில் ஒருவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும்.

கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. இதில் தோல்வி அடைந்தால் வெட்கப்படுவதற்கும், கேள்விகளை எதிர்கொள்ளத் தயக்கம் காட்டுவதற்கும் என்ன இருக்கிறது? வெற்றி பெற்றால் மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க முடிகிறது. அப்போது தோல்வி அடைந்தாலும் சந்திக்க வேண்டும். இதில் வெட்கப்பட ஏதுமில்லை.

ஒரு போட்டி அல்லது 2 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் கவலைப்படத் தேவையில்லை, வெட்கப்படவும் தேவையில்லை. ஏன் அணி தோல்வி அடைந்தது, காரணம் என்ன என்பதை இந்த தேசத்துக்குப் பயிற்சியாளர் அல்லது கேப்டன் விளக்க வேண்டும். இதுபோன்ற கேள்விகளுக்கு பும்ராவால் எவ்வாறு பதில் அளிக்க முடியும். வெற்றி பெற்றவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்கத் தயாராக முன்வரும்போது, தோல்வி அடையும்போது அதே மனப்பான்மை வேண்டும்''.

இவ்வாறு அசாருதீன் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x