Last Updated : 02 Nov, 2021 08:18 AM

 

Published : 02 Nov 2021 08:18 AM
Last Updated : 02 Nov 2021 08:18 AM

பட்டையைக் கிளப்பிய பட்லர் சதம்: அரையிறுதியில் இங்கிலாந்து: வெளியேறியது இலங்கை

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடி சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் | படம் உதவி ட்விட்டர்

ஷார்ஜா


பட்லரின் அட்டகாசமான சதம், மோர்கனின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் இலங்கை அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இங்கிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில்4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில்137 ரன்களுக்கு ஆட்டமிழந்து 26 ரன்களி்்ல் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி, குரூப்-1 பிரிவில் 4 போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்த பிரிவில் முதலிடம் பெறுமா அல்லது 2-வது இடம் பெறுமா என்பது அடுத்து வரும் ஆஸ்திரேலியா, தெ.ஆப்பிரி்க்க அணிகள் பெறும் வெற்றியைப் பொறுத்து அமையும்.

இலங்கை அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் இருப்பதால், போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறிவிட்டது. இன்னும் ஒரு ஆட்டம் இருந்தாலும் அதில் வென்றாலும் இலங்கை அணியால் அரையிறுதிக்குள் செல்வது கடினம்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்துவரை தொடக்கத்திலேயே 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், 4-வது விக்கெட்டுக்கு பட்லர், கேப்டன் மோர்கன் ஜோடி நிலைத்துநின்று அணியை கவுரவமான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினர்.

அதிலும் ஜோஸ் பட்லரின் ஆட்டம் நேற்று அற்புதமாக இருந்தது. முதல் பாதியில் மிகவும் நிதானமாக பேட் செய்த பட்லர், 15 ஓவர்களுக்குப்பின் ருத்ரதாண்டவம் ஆடினார். இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்த பட்லர் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார்.

அரைசதம் அடிக்க 45 பந்துகளை எடுத்துக்கொண்ட பட்லர் அடுத்த 22 பந்துகளில் 50 ரன்களை அடித்து சதத்தை எட்டினார்.

அதிரடியாக ஆடிய பட்லர் 67 பந்துகளில் 101 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பட்லரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பட்லர் அடித்த முதல் சதம் மற்றும், டி20 போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் சார்பில் சதம் அடித்த 4-வது வீரர் எனும் பெருைமயை பட்லர் பெற்றார்.

இந்தப் போட்டியில் பட்லர் அடித்த 6 சிக்ஸர்களுமே ஸ்குயர் லெக் திசையில்அடிக்கப்பட்டவை. ஒவ்வொரு சிக்ஸரும், இலங்கை வீரர்கள் பிடிக்க முடியாத அளவுக்கு உயரத்தில் அடிக்கப்பட்டன. ஷார்ஜா மைதானம் சிறியது என்பது அதிலும் லெக் திசையில் சிக்ஸர் அடிக்கும் தொலைவு குறைவு என்பதைப் புரிந்த பட்லர் கடைசி 5 ஓவர்களை வெளுத்துக்கட்டினார்.

ஐபிஎல் தொடரில் மிகமோசமாக பேட்டிங் செய்த மோர்கன், டி20 உலகக் கோப்பையில் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஏற்றார்போல், தனது பேட்டிங் ஃபார்ம்மோசமானால் தானாக ஒதுங்கிவிடுவேன் என்றெல்லாம் மோர்கன் பேட்டியளித்திருந்தார். ஆனால், மோர்கன் நேற்றைய ஆட்டத்தில் தனது ஃபார்முக்கு சார்ஜ் போட்டுள்ளார். நிதானமாக ஆடிய மோர்கன் 40 ரன்களை் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியப் பங்காற்றினார்.

மோர்கன் 36 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து(3சிக்ஸர்,ஒருபவுண்டரி) ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணி 58 ரன்கள் சேர்த்தது.

அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமையை மோர்கன் பெற்றார். இதுவரை 43 வெற்றிகளுடன், ஆப்கனின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கன்(42) தோனி(41) சாதனையை மோர்கன் முறியடித்துவிட்டார்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் போராட்டக் குணத்தை வெளிப்படுத்த வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி வெளிப்படுத்திய போராட்டக் குணத்தைக்கூட இவர்கள் வெளிப்படுத்தவில்லை. கடைசி 5 ஓவர்களில் பட்லர் கொத்துகறி போடும்போது, அதைத் தடுக்க எந்த பந்துவீச்சாளரும் லைன் லெனத்தில் பந்துவீசவில்லை.

பவர்ப்ளேயில் ஜேஸன் ராய், பேர்ஸ்டோ, டேவிட் மலான் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்த பந்துவீச்சாளர்கள் அதன்பின் விக்கெட்டுகளை வீழ்த்த தவறிவிட்டனர்.

இலங்கை அணியில் பேட்டிங்கை எடுத்துக்கொண்டாலும் போராட்டக் குணம் என்பதே இல்லை. இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதமான சிரமமும் இல்லாமல் விக்கெட்டுகளை வீழ்த்த உதவி செய்தனர்.

சில வீரர்கள்தான் நிலைத்தன்மையுடன் விளையாடுகிறார்கள், பந்துவீச்சிலும் நிலைத்தன்மையுடன் இருக்கிறார்கள். அந்த வகையில் ஹசரங்கா, தீக்சனாவைத் தவிர வேறு எந்த பந்துவீச்சாளர்களும் ஒழுங்காகப் பந்துவீசவில்லை.

தீக்சனா, ஹசரங்கா ஓவர்கள் முடியும் நிதானமாக ஆடிய பட்லர், மோர்கன் அதன்பின் பந்துவீச்சை வெளுத்துக் கட்டியுள்ளனர். சமீகார, குமாரா இருவரும் 10 ரன் ரேட் வீதம் வாரி வழங்கியுள்ளனர்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை இலங்கை அணியில் தொடக்கம் சரியாக அமைந்தால் நடுவரிசை சொதப்புவதும், நடுவரிசை சிறப்பாக ஆடினால்தொடக்க வீரர்கள் மோசமாக ஆடுவது என்பதை வழக்கமாக வைத்துள்ளனர். நடுவரிசையில் ராஜபக்ச(26), ஹசரங்கா(34), சனகா(26) ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர்.

இதுபோன்ற பெரிய ஸ்கோரை இலக்காக வைத்து விரட்டும்போது ஏதாவது ஒரு பார்ட்னர்ஷிப் நிலைக்கவேண்டும் ஆனால், இலங்கை அணியில் எந்த வீரர்களுக்கு இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமையவே இல்லை. அதிகபட்சமாக ராஜபக்ச, ஹசரங்கா இருவரும்சேர்ந்து 53ரன்கள் சேர்த்தனர்.இதைத் தவிர வேறு எந்த பார்ட்னர்ஷிப்பும் அமையவி்ல்லை.

தொடக்க வீரர் நிசாங்கா(1),பெரேரா(7),பெர்னான்டோ(13) மூவரும் சொதப்பினர். இதில் பெரேரா, பெர்னான்டோ இருவருமே சூப்பர்-12 சுற்றில் இதுவரை நல்ல ஸ்கோரை அடிக்கவில்லை. கடைசி வரிசை வீரர்கள் கருணாரத்னே(0), சமீரா(4),தீக்சனா(2) ஆகியோர் ஒற்றை இலக்கரன்னில் ஆட்டமிழந்தனர். 19 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்துதரப்பில் மொயின் அலி, ஜோர்டன், ரஷித் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x