Published : 01 Nov 2021 11:54 AM
Last Updated : 01 Nov 2021 11:54 AM

2010 கிரிக்கெட்டை விளையாடிவிட்டார்கள்; எல்லாம் கடந்துவிட்டது: இந்திய அணியின் தோல்வி குறித்து மைக்கேல் வான் கருத்து

இந்திய அணியினர் பெவிலியனில் அமர்ந்து போட்டியைப் பார்த்த காட்சி | படம் உதவி: ட்விட்டர்.

லண்டன்

இந்திய அணி டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது. இந்திய வீரர்கள் மனநிலையும், அணுகிய விதமும் தவறு என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் குவித்தது. 111 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 33 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் நியூஸிலாந்து வென்றுவிட்டால் அரையிறுதி ஏறக்குறைய உறுதியாகிவிடும்.

அதேசமயம், இந்திய அணியைத் தாயகத்துக்கு டிக்கெட் போட வைத்துள்ளது வில்லியம்ஸன் படை. இந்திய அணிக்கு அடுத்து 3 போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. கடந்த 2007-ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணிக்கு மோசமான வெளியேற்றமாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரிலிருந்து இந்திய அணி வெளியே விட்டது. இந்த உலகக் கோப்பையை அணுகிய இந்திய வீரர்களின் புத்திசாலித்தனம், அணுகுமுறை, மனநிலை அனைத்தும் தவறாக அமைந்துவிட்டது. இந்திய அணியினர் 2010-ம் ஆண்டு கிரிக்கெட்டை விளையாடினார்கள். போட்டித் தொடர் இந்திய அணியினரைக் கடந்து சென்றுவிட்டது.

நேர்மையாகச் சொல்கிறேன், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பல சாதனைகளை சாதித்த அளவுக்கு திறமையும், புத்திசாலித்தனமும் கொண்ட வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள்.

மற்ற அணிகளிடம் இருந்து அனுபவங்களை இந்திய கிரிக்கெட் எடுக்க வேண்டும். தங்கள் நாட்டு வீரர்கள் அதிகமான அனுபவங்களைப் பெறுவதற்கு உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் பிற லீக் போட்டிகளில் விளையாட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.”

இவ்வாறு மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x