Last Updated : 01 Nov, 2021 08:49 AM

 

Published : 01 Nov 2021 08:49 AM
Last Updated : 01 Nov 2021 08:49 AM

இந்திய அணியை 'டிக்கெட்' போடவைத்த நியூஸிலாந்து: சான்ட்னர், சோதியிடம் கோலி படை சரண்டர்; சோகத்தில் முடிந்த கேப்டன் சகாப்தம்

இந்திய அணியின் கேப்டன் கோலி, நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் இருவரும் பேசிக் கொண்ட காட்சி | படம் உதவி ட்விட்டர்

துபாய்


மிட்ஷெல் சான்ட்னர், சோதி ஆகியோரின் பந்துவீச்சால் துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் குவித்தது. 111 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 33 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூஸிலாந்து சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அன்றும்- இன்றும் இதே....

கடந்த 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் நியூஸிலாந்திடம் இதேபோன்று மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்தது. 2016, மார்ச் 15-ம்தேதி நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் 127 ரன்களை இந்திய அணி சேஸிங் செய்ய முடியாமல் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அந்தப் போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்னமாக இருந்தது, இஷ் சோதி, சான்ட்னர் இருவரும்தான். இதில் சான்ட்னர் 4 விக்கெட்டுகளையும், சோதி 3 விக்கெட்டுகளையும், நேதன் மெக்கலம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.அந்த போட்டியைப் போல இந்த ஆட்டத்திலும் சோதி, சான்ட்னரிடம் கோலிப்படை சரண்டராகியுள்ளது.

அரையிறுதிக் கதவு

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் நியூஸிலாந்து வென்றுவிட்டால் அரையிறுதி ஏறக்குறைய உறுதியாகிவிடும்.

டிக்கெட் போடுங்க

அதேசமயம், இந்திய அணியை தாயகத்துக்கு டிக்கெட் போட வைத்துள்ளது வில்லியம்ஸன் படை. இந்திய அணிக்கு அடுத்து 3 போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. கடந்த 2007ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் இந்திய அணிக்கு மோசமான வெளிேயற்றமாக அமைந்துள்ளது.

ஐசிசி சார்பி்ல் நடக்கும் போட்டிகளில் நியூஸிலாந்து அணியுடன் இதுவரை 15 போட்டிகளில் இந்திய அணி மோதி அதில் 12-வதுமுறையாக நியூஸிலாந்திடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து ஐசிசி சார்பில் நடந்த 2019ம் ஆண்டு 50ஓவர்கள் உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், இப்போது டி20 உலகக் கோப்பை என அனைத்திலும் வில்லியம்ஸன் படையிடம் கோலிப்படை தோல்வி அடைந்துள்ளது.

கேப்டன் பதவிக்கே.......சிக்கல்

இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடருடன் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். கோலியின் பிரியாவிடைப் பயணம் இனிமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் சகாப்தம் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. இதுவரை 4 ஐசிசி தொடர்களில் கோலி தலைமையில் இந்திய அணி பயணித்து ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாத ராசியில்லாத ராஜாவாக கோலி மாறிவிட்டார்.

மிகப்பெரிய போட்டித் தொடரில் இதுபோன்று மோசமான தோல்வியைச் சந்தித்து இந்திய அணி வெளியேறியது கோலியின் கேப்டன்ஷி மீது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. கோலியின் கேப்டன்ஷி திறமை மீதான கேள்வி டி20 போட்டிக்கு மட்டுமல்ல இனிமேல் நடக்கும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கும் இது பொருந்தும். தொடர்ந்து கோலி கேப்டன்பதவியில் நீடிப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

2 விக்கெட்டுகள்தான்......

இந்திய அணியைப் பொறுத்தவரை 32(பாகிஸ்தானுடன் ஒருபோட்டி) ஓவர்கள் பந்துவீசியும் இந்திய பந்துவீச்சாளர்களால் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. இந்தப் போட்டியின் தோல்விக்கு முழுக்க காரணம் மோசமான பேட்டிங், திட்டமிடல், குழப்பமான முடிவு ஆகியவற்றைத்தான் கூற முடியும். 110 ரன்களை பேட்ஸ்மேன் அடித்துக் கொண்டு அதை டிபென்ட் செய்யுங்கள் என்று பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது.

தோல்விக்கு யார் காரணம்

இந்த தோல்விக்கு ஒட்டுமொத்தமாக பேட்ஸ்மேன்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டுமென நினைத்திருந்தால், அவருக்கு ஒரே மாதிரியான ஜெர்ஸி அணிவிக்காமல், மஞ்சள் ஜெர்ஸி, நீல ஜெர்ஸி, சிவப்பு என பல்வேறு ஜெர்ஸிகளில் ஆட வைத்திருந்தால், நிச்சயம் சிறப்பாக ஆடியிருப்பார்கள்.

கடந்த 2 போட்டிகளிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா(14), ராகுல்(18), விராட் கோலி(9), பாண்டியா(23), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்(12), ஜடேஜா(26)இஷான்(6) என பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒட்டுமொத்த தோல்வி அடைந்தனர். இந்த ஆட்டத்தில் மட்டும் இந்திய பேட்ஸ்மேன்கள் 54 டாட் பந்துகளை விட்டுள்ளனர், அதாவது 9 ஓவர்களில் இந்திய அணி ரன் ஏதும் அடிக்கவில்லை. மீதமுள்ள 11 ஓவர்களில் மட்டும்தான் ரன்கள் அடித்துள்ளனர்.

இந்திய அணியினர் நேற்றை ஆட்டத்தை டி20 போட்டி என்று நினைத்திருந்தால் பவுண்டரி, சிக்ஸர் அடித்திருப்பார்கள். ஆனால், ஒருநாள் போட்டி போன்று ஒரு ரன், 2ரன்கள் என்றுதான் எடுத்தனர். பவுண்டரி, சிக்ஸர் கிடைத்தால் அது போனஸகாத்தான் இந்திய அணியினர் நினைத்திருந்தனர்.

இந்திய பேட்ஸ்மேன்களின் ஷாட்களைத் தேர்வு செய்தது அடித்தது அனைத்துமே தவறாகத்தான் இருந்தது. நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸனிடம் சொல்லிவிட்டு, கேட்ச் பிடிக்க பயிற்சி அளித்தது போன்று அனைத்துவிக்கெட்டுகளும் எளிதாக கேட்ச் பிடிக்கும் வகையில்தான் இருந்தது.

சோதி, சான்ட்னரிடம் சரண்டர்

இஷ் சோதி, சான்ட்னர் பந்துவீச்சில் ப வுண்டரி, சிக்ஸர் அடிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இதற்கு பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவதா அல்லது இ்ந்திய பேட்டிங் மோசமாக இருந்தது எனக் குறைகூறுவதா எனத் தெரியவில்லை.

ஏற்குறைய 6-வது ஓவரில் இந்திய பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடித்தபின், அடுத்த பவுண்டரியை 71 பந்துகளுக்குப்பின் 17-வது ஓவரில்தான் அடிக்க முடிந்தது.

சான்ட்னர், சோதி இருவரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு லைன், லென்த்தைவிட்டு நகற்றாமல் பந்துவீசியதால், பேட்ஸ்மேன்களால் எந்த வாய்ப்பையும் எடுக்க முடியாமல் போனது, அவ்வாறு இறங்கி வந்து அடிக்க முற்பட்டபோது விக்கெட்டுகளை இழந்தனர்.

இதுபோன்ற நேரத்தில் பேட்ஸ்மேன்கள் ஏதாவது ஒரு பந்துவீச்சாளரை டார்கெட் செய்து அடிக்க வாய்ப்பெடுத்திருக்க வேண்டும். ஆனால், எந்த பந்துவீச்சாளரின் பந்துவீச்சையும் அடிக்க துணிச்சல் இல்லாத பேட்டிங்கைத்தான் வெளிப்படுத்தினர்.

மாற்றங்கள் குழப்பங்கள்

டி20 உலகக் கோப்பைப் போன்ற முக்கியமான ஆட்டங்களில் அணியில் அதிகமான மாற்றங்கள், பரிசோதனைகள் எப்போதும் ஆபத்தானது. அதிலும் ரோஹித் சர்மா, ராகுல் சர்வதேச அளவில் பல அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தொடக்க ஜோடி. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக சரியாக விளையாடவில்லை என்பதால், அவர்களை மாற்றி, அனுபவவீரர் ரோஹித்தை ஒன்டவுன் இறக்கியது மிகத்தவறான முடிவு.(மென்ட்டர் கொடுத்த ஐடியாவா தெரியவில்லை!).

ஹர்திக் தேவையா

ஹர்திக் பாண்டியா 100 சதவீதம் உடற்தகுதியில்லை எனத் தெரிந்தும் அவரை பந்துவீச வைத்ததும், அவருக்கு பேட்டிங் வாய்ப்பு வழங்கியதும் போன்ற தவறான முடிவுகளை திரும்பப் திரும்ப செய்ய என்ன அழுத்தம் நேர்ந்தது எனத் தெரியவில்லை. ஹர்திக் பாண்டியா பேட்டிங் ஃபார்மிலும் இல்லை, பந்துவீச்சிலும் கடந்த சில மாதங்களாகவே பயிற்சி எடுக்காத நிலையில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு, ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

அஸ்வின் புறக்கணிப்பு ஏன்

விராட் கோலி செய்த தவறா அல்லது நிர்வாகம் செய்த தவறான எனத் தெரியவில்லை. இங்கிலாந்து தொடரிலும் அஸ்வினைப் புறக்கணித்தார்கள், கடந்த இரு முக்கியமான ஆட்டத்துக்கும் அஸ்வின் போன்ற அனுபவமான பந்துவீச்சாளரைப் புறக்கணித்தார்கள். இது ஏன் எனத் தெரியவில்லை.

உடற்தகுதியில்லாத ஹர்திக் பாண்டியாவுக்கு பல்வேறு சாக்குபோக்கு கூறி அணியில் இடம் கொடுக்க வைக்கும் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்தி, மென்ட்டர் தோனி ஆகியோர் ஏன் அனுபவ வீரர் அஸ்வினை பயன்படுத்தவி்ல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இனிவரும் போட்டிகளில் அஸ்வின் களமிறக்குவோம் என அணி நிர்வாகம் கூறினால், அதனால் எந்தப் பயனும் இல்லை.

பிசிசிஐ நிர்வாகம் கவனிக்குமா

பிசிசிஐ நிர்வாகம் ஒரு விஷயத்தை இனிமேலாவது உணர வேண்டும். இந்திய வீரர்கள் ரோபட்கள் அல்ல. இங்கிலாந்து பயணத்திலிருந்து தொடர்ச்சியாக கிரிக்கெட்டை இந்திய வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

ஐபிஎல் தொடர் என்பது மிக நீண்ட தொடர், அதில் ஒவ்வொரு அணி நிர்வாகத்துக்கும் விஸ்வாசமாக விளையாட வேண்டியநெருக்டி, பயோ-பபுள் சூழல் போன்றவை மனரீதியாகவே வீரர்களுக்கு சோர்வை ஏற்படுத்திருக்கும். உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு குறைந்தபட்சம் 10 நாட்களாகவு ஓய்வு அளித்திருந்தால், வீரர்கள் மனரீதியாக தயாராக உதவியாக இருந்திருக்கும்.

திறமையான அணி

இந்திய அணியினரின் திறமையில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் சரியாக வெளிப்படுத்தவில்லை, அவர்கள் சரியாக தயார் செய்யவில்லை, மனரீதியாக வலுப்படுத்தி தயார்படுத்த வில்லை என்பதுதான் நித்சனம். ஆட்டம் முடிந்தபின் விராட் கோலி பேசும்போது அவரின் உடல்மொழி தான் நம்பிக்கையிழந்துவிட்டேன் என்பதை ெவளிப்படுத்தும் விதத்திலேயே இருந்தது.

இப்போதுள்ள சூழலில் இந்திய அணிக்குத் தேவை திறமையான வீரர்கள்அல்ல. திறமையான இளைஞர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். பாஸிட்டிவ் மைன்ட்செட், நம்பிக்கையூட்டும் வார்த்தைகள், இதுவும் கடந்துபோகும் என்பது போன்ற வார்த்தைகள்தான்.

2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் மோசமான தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, 2011ம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியனானது நினைவில்லையா. ஆதலால், நிச்சயம் மீண்டு வருவதற்கு நம்பிக்கையான வார்த்தைகளும், நம்பிக்கையும்தான் அவசியம்

பிரமாதம்

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் அனைத்திலும் நேர்த்தியாகச் செயல்பட்டனர். கேப்டன் வில்லியம்ஸன் நியூஸிலாந்து அணியை தான் பெற்ற குழந்தை போன்று பாவிக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

அந்த அளவுக்கு நியூஸிலாந்து அணி வீரர்களை தேர்ந்தெடுத்து சரியான நேரத்தில் பயன்படுத்துகிறார். இந்திய பேட்ஸ்மேன்கள் யாருக்கு எந்தப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவது, எந்த இடத்தில் பீல்டிங் அமைப்பது என்பதை கணித்து, திட்டமிட்டு செய்துள்ளதற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

நியூஸிலாந்து பந்துவீச்சார்கள் சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள், சோதி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் 2 விக்கெட்என இருவரும் 8 ஓவர்கள் வீசி 32 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். போல்ட், சவுதி இருவருமே ரன்களை அதிகமாக வழங்காமல் கட்டுக்கோப்பாக வீசினர்.

பேட்டிங்கிலும் கப்தில்(20) விைரவாக ஆட்டமிழந்தபோதிலும், மிட்ஷெல் அதிரடியாக பேட் செய்து எளிய இலக்கை குறைந்த ஓவர்களில் எட்ட உதவினார். ஒருபுறம் வில்லியம்ஸன் நங்கூரமிட, மறுபுறம் மிட்ஷெல் அதிரடியாக பேட்டை சுழற்றி சிக்ஸர் பவுண்டரி என விளாசினார். 3சிக்ஸர், 5பவுண்டரி உள்ளிட்ட 49 ரன்களில் மிட்ஷெல் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸன் 33 ரன்களுடனும், கான்வே 2 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x