

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பரம ரசிகருக்கு, உலகக்கோப்பை டி-20 இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு மகேந்திர சிங் தோனி, தனது ஒதுக்கீட்டில் இலவச டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளார்.
சிகாகோவைச் சேர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் முகமது பஷீர். பாகிஸ்தான் தேசியக் கொடியை உடையாக அணிந்து பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளில் காட்சியளிக்கும் இவர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலம்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை இவர் தவற விடுவதேயில்லை. சிகாகோவில் வசித்து வரும் இவர் அங்கு முஹல் உணவு விடுதி நடத்தி வருகிறார். உலகின் எந்த மூலையில் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் விளையாடினாலும், அங்கு சென்று விடுவார்.
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்துள்ளார். பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் பங்கேற்காத போதும், இறுதிப் போட்டியைப் பார்க்க காத்திருந்தார். ஆனால், அவரிடம் டிக்கெட் இல்லை.
அவருக்கு, மகேந்திர சிங் டோனி தனது ஒதுக்கீட்டில் இலவச டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக முகமது பஷீர் கூறியதாவது: இறுதிப் போட்டியைப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால், டிக்கெட் இல்லை. இந்திய அணி வலைப்பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இங்கிலாந்தில் நடந்த சாம்பியன் டிராபி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் விளையாடியபோது நான் அங்கிருந்தேன். அப்போது தோனிக்கு என்னைப் பார்த்திருப்பதால் என் முகம் அவருக்குப் பரிச்சயம். ஆகவே, தோனியிடம் இறுதிப் போட்டியைப் பார்க்க என்னிடம் டிக்கெட் இல்லை என்றேன்.
உடனே அவர் தன் பயிற்சியாளர் ரமேஷ் மனேவை அழைத்து, டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். எனக்கு சிறப்பு இலவச டிக்கெட் கிடைத்தது. தோனியின் செயல்பாடு மிகவும் ஆச்சரியமளித்தது.
அவர் என்னிடம் சிறிது நேரம் பேசினார். என்னைப் பற்றிக் கேட்டார். வெகு நேரம் நான் அங்கு நின்றிருந்தேன். எனக்கு கொஞ்சம் பழங்களை அளிக்கும்படி அங்கிருந்த ஒருவரிடம் தோனி கூறினார். நான் பாகிஸ்தான் அணியின் ரசிகன்தான்; ஆனால், இன்று தோனியின் ரசிகனாகிவிட்டேன் என்றார். தோனி தன்னிடம் பேசியதில், வானில் பறப்பதைப் போன்று உணர்ந்தேன் என பெருமிதத்துடன் கூறினார் பஷீர்.
தீவிர கிரிக்கெட் ரசிகரான முகமது பஷீர், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளுக்கும் டிக்கெட் பதிவு செய்து விட்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாகிஸ்தான் விளையாடும் அனைத்துப் போட்டிகளுக்கும் டிக்கெட் வாங்கிவிட்டேன். ஒரு போட்டிக்கு 20 டாலர்கள் (சுமார் ரூ.1200) டிக்கெட் கட்டணம். இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு 80 டாலர்கள் (சுமார் ரூ.4,800) கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கினேன். கட்டணம் பற்றிக் கவலையில்லை. இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு இதை விட அதிகம் கொடுத்தும் டிக்கெட் வாங்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.