Published : 29 Oct 2021 02:33 PM
Last Updated : 29 Oct 2021 02:33 PM

2022 ஐபிஎல்; 8 அணிகளுக்கு 4 வீரர்கள்; 2 புதிய அணிகளுக்கு 3 வீரர்களைத் தக்கவைக்கலாம்; ஏலத்தொகை அதிகரிப்பு: எந்தெந்த வீரருக்கு வாய்ப்பு?

கோப்புப்படம்

புதுடெல்லி

2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளில் ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் 4 வீரர்களைத் தக்கவைக்கலாம். புதிதாக வந்துள்ள2 அணிகள் ஏலத்துக்கு முன்பாகவே 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளும் வீரர்களுக்காக ஏலத்தில் ரூ.90 கோடிவரை செலவிடலாம் என வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் ரூ.85 கோடியாக இருந்தது.

ஏலத்துக்கான புதிய விதிமுறைகள் அனைத்தும் இந்த வாரத்துக்குள் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. இருவிதமான விதிமுறைகள் ஆலோசிக்கப்பட உள்ளன. ஒன்று ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளும் 3 உள்நாட்டு வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் தக்கவைக்கலாம், அல்லது 2 வெளிநாட்டு வீரர்கள், 2 உள்நாட்டு வீரர்களைத் தக்கவைக்கலாம்.

புதிதாக வரும் 2 அணிகளும் ஏலத்தில் பங்கேற்கும் முன்பே வீரர்கள் பட்டியலில் 3 வீரர்களைத் தேர்ந்தெடுக்கலாம். கடந்த ஏலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஆர்டிஎம் முறை அதாவது மேட்ச் கார்டு முறை இந்த முறை இல்லை எனத் தெரிகிறது.

ஆனால், 2022 ஐபிஎல் ஏலத்தில் சில பிரபல வீரர்களான தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், பும்ரா ஆகியோர் தற்போது இருக்கும் அணிகளிலேயே தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு மேட்ச் கார்டு இல்லாத காரணத்தால் அனைத்து அணிகளும் முக்கிய வெளிநாட்டு வீரர்களை இழக்க நேரிடும் வாய்ப்புள்ளது. ஏலம் நடப்பதற்கு முன்பே புதிய 2 அணிகளும் 3 வீரர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதால் கே.எல்.ராகுல், அஸ்வின், டேவிட் வார்னர் ஆகியோர் புதிய அணிகளுக்குச் செல்லக்கூடும். சன்ரைசர்ஸ் அணி ஏற்கெனவே வார்னரைக் கடந்த சீசனில் கழற்றிவிட்டதால், இனிமேல் அந்த அணிக்குள் வார்னர் வருவதற்கு வாய்ப்பில்லை.

ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இல்லாமல் கோலி வீரராக மட்டுமே தொடரப்போகிறார். ஆதலால், புதிய கேப்டனுக்குரிய வீரரை அந்த அணி நிர்வாகம் தீவிரமாகத் தேடும்.

தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை, சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை என அணியின் நிர்வாகி ஸ்ரீனிவாசன் தெரிவித்திருப்பதால் தோனி அணியில் தொடர்வார். தக்கவைப்பு வீரர்களாக கெய்க்வாட், ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பிருக்கலாம். வெளிநாட்டு வீரர்கள் என்ற வகையில் பிராவோ, டூப்பிளசிஸ் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

மும்பை அணியைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா, பும்ரா, பொலார்ட், இஷான் கிஷன் ஆகியோர் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பந்த், ஆவேஷ் கான், அக்ஸர் படேல், ஸ்டாய்னிஷ் ஆகியோரைத் தக்கவைக்கும். பிரித்வி ஷா, தவண், நோர்க்கியா ஆகியோருக்கு வாய்ப்பிருக்காது எனத் தெரிகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இளம் வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்து, கில், வெங்கடேஷ் அய்யர், வருண் சக்ரவர்த்தி ஆகியோரைத் தக்கவைக்கும். கேப்டன் மோர்கனுக்குத் தற்போதே 35 வயதாகிவிட்டதால் அவர் அணியில் நீடிக்க வாய்ப்பில்லை.

சன்ரைசர்ஸ் அணி புவனேஷ்வர் குமார், ரஷித்கான், உம்ரான் மாலிக், அப்துல் சமது ஆகியோரைத் தக்கவைக்கலாம் எனத் தெரிகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி, கேப்டன் ராகுலைக் கழற்றிவிடும். ஆனால், அர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னோய், ஷமி ஆகிய 3 பந்துவீச்சாளர்களை மட்டும் தக்கவைக்கக்கூடும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளது. இருவரில் ஒருவர் ஏலத்தில் பங்கேற்றால் அவர்களுக்காக அதிகமாகச் செலவிடக்கூடும். இது தவிர சஞ்சு சாம்ஸன், கார்த்திக் தியாகி, சேத்தன் சக்காரியாவைத் தக்கவைக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x