Published : 27 Oct 2021 04:26 PM
Last Updated : 27 Oct 2021 04:26 PM

மண்டேலாவின் தென் ஆப்பிரிக்கா இதுவல்ல: குயின்டன் டீ காக் செயலுக்கு சல்மான் பட் கிண்டல்

தென் ஆப்பிரக்க வீரர் குயின்டன் டீ காக் | கோப்புப்படம்

லாகூர்

இனவெறிக்கு எதிராகத் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு ஒற்றுமையாக சபதம் ஏற்றபோது குயின்டன் டீ காக் மட்டும் தனிப்பட்ட பிரச்சினையால் வராதது, மண்டேலாவின் தென் ஆப்பிரிக்கா அல்ல என்பதையே காட்டுகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்ற கருத்துக்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலிட்டுக் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் சபதம் ஏற்றனர்.

இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்துக்குப் பின் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு சபதம் ஏற்க வேண்டிய நிலையில் விக்கெட் கீப்பர் டீ காக் தனிப்பட்ட காரணங்களால் களமிறங்கவில்லை என தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து கிளாசன் களமிறக்கப்பட்டார்.

இனவெறிக்கு எதிராக வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு சபதம் ஏற்கும்போது குயின்டன் டீ காக் மட்டும் வராதது பெரும் கண்டனத்தைக் கிளப்பியுள்ளது. ஆனால், டீ காக் முடிவுக்கு மதிப்பளிப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தனது யூடியூப்பில் இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''டீ காக் செய்தது புதுவிதமாக இருக்கிறது. இனவெறிக்கு எதிராக அணியில் உள்ள ஒவ்வொருவரும் சபதம் ஏற்கும்போது, மனிதர்கள் அனைவரும் சமம். அவர்களை இனம், நிறத்தின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது என்று சபதம் ஏற்கும்போது டீ காக் வராதது வியப்பாக இருக்கிறது.

முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக சபதம் ஏற்பது என்பது தென் ஆப்பிரிக்க அணியில் ஒவ்வொரு வீரரும் முடிவெடுத்ததுதானே. டீ காக் இந்த முடிவுக்கு ஒத்துழைத்துச் செல்லாத நிலையில், மேலும் பிரிவினையை அதிகப்படுத்துகிறார். எதற்காக இவ்வாறு டீ காக் செய்தார் எனத் தெரியவில்லை.

கறுப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் அதிகமாக இருக்கும் நாட்டில் டீ காக் வாழ்கிறார். ஆனால், நிச்சயம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க நாட்டில் அவர் வாழவில்லை. தென் ஆப்பிரிக்காவில் சூழல் மேம்பட்டதும் அவர்களை மீண்டும் உலகத்தின் நீரோட்டத்தில் மண்டேலா இணைத்தார், மக்களை ஒன்றாக இணைத்தார். ஆனால், அவர் செய்தவை வீணாகிவிட்டன. அவர் சொன்ன செய்தி மிக எளிமையானது. அனைவரும் சமம் என்ற செய்தி மட்டும்தான்.

தென் ஆப்பிரிக்க அணி இட ஒதுக்கீடு முறையில்தான் இயங்கி வருகிறது. அவர்களின் முதல் போட்டியில், அணியில் உள்ள சிலர் ஓரமாக அமர்ந்தும், சிலர் தனியாக நின்று கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. நிச்சயமாகத் தென் ஆப்பிரிக்க அணியினர் மன உளைச்சலோடு இருப்பதாக நினைக்கிறேன். அவர்களின் நம்பிக்கைகள், கலாச்சார வேறுபாடுகள் அதிகமாக வெளிப்படையாகத் தெரியக்கூடாது. இவர்கள் இங்கு கிரிக்கெட் விளையாட மட்டுமே வந்துள்ளார்கள்''.

இவ்வாறு சல்மான் பட் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x