'T20 உலகக் கோப்பை; இந்தியாவுக்கு எதிரான போட்டி: நியூஸிலாந்து அணியில் முக்கிய பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் விலகல்?

படம் உதவி | ட்விட்டர்
படம் உதவி | ட்விட்டர்
Updated on
2 min read

இந்திய அணிக்கு எதிராக வரும் 30-ம் தேதி நடக்கும் டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் முக்கிய அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் காயத்தால் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.

ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த குரூப்-2 பிரிவில் நடந்த சூப்பர்-12 ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்து கப்திலின் கால் பெருவிரலில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. அதன்பின் நீண்டநேரம் களத்தில் நிற்காத கப்தில் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆனால், காயத்தின் தீவிரம் அதிகமாகியுள்ளதை அடுத்து அவர் ஒரு வாரத்துக்கு மேல் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வரும் 30-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடக்கும் போட்டியில் கப்தில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மார்டின் கப்தில்
மார்டின் கப்தில்

ஏற்கெனவே தசைப் பிடிப்பு காரணமாக வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குஷன் உலகக் கோப்பை தொடரிலிருந்தே வெளியேறிவிட்டார். அவர் இல்லாதது நியூஸிலாந்து அணிக்குப் பெரும் பின்னடைவு. இந்த நேரத்தில் கப்தில் இல்லாதது தொடக்க வரிசையை ஆட்டம் காணவைக்கும்.

நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில், “கப்திலுக்குக் காயம் தீவிரமாக இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்துக்குப் பின் காயத்தின் தீவிரம் தெரியவரும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என இப்போது கூற முடியாது.

லாக்கி பெர்குஷன்
லாக்கி பெர்குஷன்

பெர்குஷன் தசைப் பிடிப்பு காரணமாக போட்டித் தொடரிலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக ஆடம் மில்னேவைச் சேர்க்க அனுமதி கேட்டபோது, ஐசிசி தொழில்நுட்பப் பிரிவு மறுத்துவிட்டது. எங்களுக்கு இது மிகுந்த வேதனையைத் தருகிறது. ஐசிசி அனுமதிக்காக ஆடம் மில்னே காத்திருக்கிறார். ஆனால், ஒப்புதல் ஏதும் வரவில்லை” எனத் தெரிவித்தார்.

வேகப்பந்துவீச்சாளர் பெர்குஷன், தொடக்க வீரர் கப்தில் இருவரும் இல்லாமல் நியூஸிலாந்து களமிறங்குவது நிச்சயம் பலவீனமாகவே இருக்கும். இந்திய அணிக்கு எதிராகப் பல போட்டிகளில் கப்தில் சிறப்பாக ஆடியுள்ளதால், அவர் இல்லாதது இந்திய அணியின் வெற்றிக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in