

பிரச்சினையை , சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் கேள்வி கேட்கிறீர்கள் எனத் தெரிந்தால் அதற்கு ஏற்றார்போல் பதில் அளிப்பேன். இதுபோன்று கேட்காதீர்கள் என்று ஊடகத்தினரிடம் விராட் கோலி கடிந்து கொண்டார்.
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வி்க்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இந்திய அணியை உலகக் கோப்பைப் போட்டியில் சந்தித்துவரும் பாகிஸ்தான் இதுவரை ஒருமுறைகூட வெல்லமுடியாமல் பெரும் சுமையாக சுமந்துவந்தது. அந்த பிரச்சினை பாபர் ஆஸம் மூலம் தீர்க்கப்பட்டது.
இந்த போட்டிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்படவில்லையே அவருக்குப் பதிலாக இஷான் கிஷனை களமிறக்குவீர்களா என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ஆவேசமாக பதில் அளித்த கோலி, “ ரொம்ப துணி்ச்சலான கேள்வியை கேட்டுள்ளீர்கள். என்ன நினைக்கிறீர்கள் சார். உலகிலேயே தலைசிறந்த வீரர்களைக் கொண்ட அணியை வைத்து நாங்கள் விளையாடுகிறோம். நான் உங்களிடம் கேட்கிறேன். சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கிவிட முடியுமா. ரோஹித் சர்மாவை அணியிலிருந்து கழற்றிவிட கேட்கிறீர்களா. நீங்கள் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டால் முன்கூட்டியே கூறிவிடுங்கள், அதற்கு ஏற்றார்போல் பதில் அளிப்பேன். நீங்கள் கேட்கும் கேள்வி நம்பமுடியாததாக இருக்கிறது.
நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். பாகிஸ்தானை வீழ்த்த எங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. போதுமான அளவு அழுத்தம் கொடுக்க முயற்சித்தோம், ஆனால், அனைத்துக்கும் பதில் அளித்தார்கள். எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்கள் எனக் கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
களத்தில் இறங்கினால் எங்களிடம் 11 வீரர்கள், எதிரணியிடம் 11 வீரர்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் வெற்றிக்கும், தோல்விக்கும் சமமான வாய்ப்புள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அப்ரிடி சிறப்பாகப் பந்து வீசினார், புதிய பந்தில் சரியான லைன் லென்த்தில் வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை தொடக்கத்திலேயே புதியப் பந்தைப் பயன்படுத்தி விக்கெட் வீழ்த்துவது அவசியம். எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் நெருக்கடி அளித்தார் அப்ரிடி. அவருக்கு நிச்சயம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கூடுதலாக 20 முதல் 25 ரன்கள் அடிப்பது என்பது கடினமானது
இவ்வாறு கோலி தெரிவி்த்தார்