

வரும் 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது. இதற்கான டெண்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய அணிகளுக்கான ஏலம் துபாயில் இன்று நடைபெறுகிறது.
22 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் புதிய அணிகளுக்கான அடிப்படை விலை ரூ.2,000கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஐந்து முதல் ஆறு நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் தீவிரமாகபோட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருடத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.
அந்த வகையில் கவுதம் அதானி மற்றும் அவரது அதானி குழுமம் அகமதாபாத் அணியின் உரிமையை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் புதிய அணியை ஏலம் எடுப்பதில் தீவிரமாக செயல்படக்கூடும் என கருதப்படுகிறது. இந்த இரு நிறுவனங்களும் அணி உரிமையை குறைந்தபட்சம் தலா ரூ.3,500 கோடிக்கு ஏலம் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் போட்டி ஒளிபரப்பு உரிமம் ரூ.36 ஆயிரம் கோடிக்கு ஏலம் செல்லக்கூடும் என கருதப்படுகிறது. இதில் இருந்து பெரும்தொகை அணிகளின் உரிமையாளர்களுக்கு செல்லும். இதனால் அணிகளுக்கான ஏலம் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி முதல் 10 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என பிசிசிஐ கருதுகிறது.