

இங்கிலாந்தில் நடைபெறும் அடுத்த 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் வரை தோனி இந்திய அணியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று சேவாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தோனியால் உலக பவுலர்களை தொடர்ந்து அச்சுறுத்த முடியும் என்றும் தொடர்ந்து 4-ம் நிலையில் அவர் களமிறங்கினால் இந்தியா நிறைய போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்று விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
ஆஜ்தக் சலாம் கிரிக்கெட் சந்திப்பில் கலந்து கொண்ட சேவாக் கூறியதாவது:
தோனி 4-ம் நிலையில் இறங்குவது அணிக்கு வலு சேர்க்கிறது. அவர் வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு இரண்டையுமே அனாயாசமாக ஆடுகிறார். மேலும் எப்போது நின்று ஆட வேண்டும், எப்போது அதிரடியாக ஆடவேண்டும் என்பதை நன்றாகத் திட்டமிடுகிறார். நான் இதனை 2015 உலகக்கோப்பையிலிருந்து தெரிவித்து வருகிறேன். அவர் அந்த நிலையில் அவுட் ஆக மாட்டார் என்று நான் கூறவில்லை, ஆனால் அந்த நிலையில் அவர் இறங்கினால் அதிக போட்டிகளை இந்தியா வெல்ல வாய்ப்பு ஏற்படும்.
தோனி மேலும் 2-3 ஆண்டுகளுக்கு விளையாடலாம். 2011-ல் சச்சின் டெண்டுல்கர் பற்றியும் இப்படித்தான் ஓய்வு பற்றிய ஊகங்கள் வெளியாகின ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தோனி 2019 உலகக்கோப்பை வரை விளையாட முடியும். டெஸ்ட் போட்டிகளில் ஆடாததால் அவர் தனது உடல்தகுதியையும் நல்ல முறையில் பராமரிக்க முடியும்.
எனக்கும் தோனிக்கும் இடையே எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லை. அதனால் நாங்கள் இருவரும் எப்போதும் சேர்ந்து சுற்றிய படியே இருக்க வேண்டும் என்பதும் அர்த்தமல்ல. ஆஸ்திரேலியாவில் நான், கவுதம் கம்பீர், விவிஎஸ் லஷ்மண் ஆகியோர் எங்கள் குடும்பத்துடன் இருந்தோம். எனவே நாங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டோம். கருத்து வேறுபாடுகள் பற்றிய செய்தியெல்லாம் மீடியாக்களின் கற்பனையே.
வீரர்களுக்கிடையேயான உறவு சகஜமாகவே இருந்தது. ஒரு வீரரை அவரது ஆட்டத்தை வைத்தே ஆதரிக்க முடியும். நான் சரியாக விளையாடவில்லை. நான் 3-4 டெஸ்ட் போட்டிகள் சில ஒருநாள் போட்டிகளில் எதிர்பார்ப்புக்கு இணங்க விளையாடவில்லை. ரன்கள் எடுக்கவில்லை. சிறப்பாக ஆடுபவரை எப்படி நீக்க முடியும்? ரோஹித் சர்மாவை இப்போது அணியிலிருந்து யாராலும் நீக்க முடியாது.
நான் ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டேன், இல்லையெனில் அணித் தேர்வாளர்கள் எனது பெயரையும் அணித்தேர்வில் பரிசீலிப்பார்கள்” என்றார்.
தற்போதைய இந்திய அணியில் அவரது பேட்டிங்கை நினைவூட்டும் படியான வீரர் யாராவரு இருக்கிறாரா என்ற கேள்விக்கு, சேவாக், “இதுவரை அப்படி யாரும் இல்லை” என்றார்.