

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியுடன் நாளை முக்கியமான மோதலில் பாகிஸ்தான் அணி மோத இருப்பதால், முன்னதாகவே 12 பேர் கொண்ட பட்டியலை பாகிஸ்தான் அறிவித்துவிட்டது.
இந்த 12 வீரர்களில் இருந்து ப்ளேயிங் லெவன் நாளை போட்டி தொடங்கும் முன் அறிவிக்கப்படுவார்கள்.
கிரிக்கெட் உலகில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளும் நாளை களமாடுகிறார்கள். அதிகமான எதிர்பார்ப்பு, பரபரப்பு, நெருக்கடி அழுத்தம் நிறைந்ததாக இந்தப் போட்டி இரு வீரர்களுக்கும் அமையும் எனத் தெரிகிறது.
உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியஅணியை டி20 போட்டியில் பாகிஸ்தான் வென்றது இல்லை, ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியிலும் வென்றதில்லை. இந்த வரலாறுதொடருமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் இரு அணிகளும் மீண்டும் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நாளை பாகிஸ்தான் அணியில் விளையாடஇருக்கும் ப்ளேயிங் லெவனில் இடம் பெறும் வீரர்களை தேர்வு செய்ய 12 வீரர்கள் கொண்ட பட்டியலை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
இதில் அனுபவ வீரர்கள் ஷோயிப் மாலிக், முகமது ஹபீஸ் இந்தியாவுக்கு எதிராக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான கடந்த கால அனுபவம் கை கொடுக்கும என்பதால் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகி்ஸ்தானின் வேகப்புயல் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிதி, ஹசன் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் ஆடுகளங்கள் மெதுவானவை, வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பது கடினம் என்றபோதிலும் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 12 வீரர்களில் இருந்து நாளை ப்ளேயிங் லெவன் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
12 வீரர்கள் விவரம்:
பாபர் ஆஸம்(கேப்டன்), முகமது ரிஸ்வான், பக்கர் ஜமான், முகமது ஹபீஸ், ஷோயப் மாலிக், இமாத் வாசிம், ஆஷிப் அலி, சதாப் கான், ஹசன் அலி, ஹைதர் அலி, ஹரிஸ் ராப், ஷாகின் அப்ரிதி