

டி20 உலகக் கோப்பையை இந்திய அணிதான் வெல்லும் என்று பாராட்டுத் தெரிவித்த மைக்கேல் வான், மறுபுறம் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பிரதான சூப்பர்-12 ஆட்டங்கள் 23ம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்திய அணி தனது முதல்ஆட்டத்தில் 24ம்தேதி பாகிஸ்தானைச் சந்திக்கிறது. இதற்கிடையே சூப்பர்-12 பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் ஒவ்வொன்றுக்கும் இரு பயிற்சி ஆட்டங்ககள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராகுல், இஷான் கிஷனின் அதிரடிஆட்டத்தால் 189 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த 2-வது பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ராகுலின் அதிரடி ஆட்டம் அஸ்வினின் பந்துவீச்சு ஆகியவற்றால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஏறக்குறைய ப்ளேயிங் லெவனில் இந்திய அணியில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது இந்த இரு போட்டிகளிலும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி இரு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடியதைப் பார்த்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இந்திய அணியைப் புகழந்துள்ளார். இந்திய அணிதான் டி20 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணி எனப் பாராட்டியுள்ளார். மறுபுறம், இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
மைக்கேல் வான்ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடிய விதத்தைப் பார்த்தால், டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான சாத்தியமான அணி எனத் தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இந்திய அணி இடம் பெற்றுள்ள சூப்பர்-12 பி பிரிவில் இந்திய அணியோடு பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும்,தகுதிச்சுற்றில் மூலம் வரும் இரு அணிகளும் இடம் பெறும்.
இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் வான் அளித்துள்ள ஆலோசனையாக ட்விட்டரில் கருத்துப் பதிவி்ட்டுள்ளார். அதில் “ இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என நினைத்தால், முதலில் பவர்ப்ளேயில் 6 ஓவர்களையும் முழுமையாகப் பயன்படுத்தி ரன் சேர்ப்பதற்கான வழிகளைக் காண வேண்டும். ரன் சேர்க்க இந்த 6 ஓவர்கள்தான் சிறந்தது. டேவிட் மலான் ஒன்டவுனில் களமிறங்கி அதிகமான பந்துகளை வீணடித்தால், அவருக்குப் பதிலாக 3-வது இடத்தில் பேர்ஸ்டோவை களமிறக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் இங்கிலாந்து அணிக்கு ஆலோசனைகளை வழங்குவது மறுபுறம் இந்திய அணிதான் உலகக் கோப்பைைய வெல்லும் என ட்விட்செய்யும் மைக்கேல் வானை சமூக ஊடகங்களில் கடுமையாக நெட்டிசன்கள்விமர்சித்து வருகின்றனர்.