Last Updated : 21 Oct, 2021 08:44 AM

 

Published : 21 Oct 2021 08:44 AM
Last Updated : 21 Oct 2021 08:44 AM

சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி: வெற்றி பெற்றும் சிக்கலில் சிக்கிய இலங்கை: அயர்லாந்துக்கு எதிராக அபார வெற்றி

ஹசரங்காவின் ஆல்ரவுண்ட் ஆட்டம், நிசங்காவின் அரைசதம், பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த உலகக் கோப்பைபப் போட்டியின் ஏ பிரிவு தகுதிச் சுற்றில் அயர்லாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்குள் சென்றது.

முதலில் பேட் செய்தஇலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்களி்ல் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன், நல்ல ரன்ரேட்டில் சூப்பர் 12 பிரிவுக்கு தகுதி பெற்றது. ஆனால், வெற்றிபெற்ற நிலையிலும்இலங்கை அணி சிக்கலில் சிக்கிக்கொண்டது.

ஏனென்றால், ஏ பிரிவில் முதலிடம் பெறும் அணி சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் இடம் பெறும். குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் என ஜாம்பவான்கள் இருக்கும் இடத்தில் இலங்கை சிக்கிவிட்டது.

இந்த 4 அணிகளையும் இப்போதிருக்கும் இலங்கை அணியால் வீழ்த்துவது எளிதல்ல. இந்த 4 அணிகளையும் வலுவாக எதிர்க்கும் பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் இலங்கையிடம் இல்லை என்பதுதான் நிதர்சனம். தகுதிச் சுற்றில் தப்பித்து சூப்பர்-12 சுற்றுக்குள் வந்த இலங்கைக்கு சோதனைக்கு மேல் சோதனை காத்திருக்கிறது.

அதேபோல பி பிரிவு தகுதிச் சுற்றில் 2வது இடம்பிடிக்கும் அணியும் சூப்பர்-12 சுற்றில் ஏ பிரிவில் இடம் பிடிக்கும். அந்தவகையில் வங்கதேசம் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கெனவே இலங்கை சிக்கி சின்னாபின்னமாகப் போகும் நிலையில்,வங்கதேசமும் உள்ளே வரும்.

ஆனால், இந்தியா, பாகிஸ்தான் அணி இடம் பெற்றுள்ள சூப்பர்-12 குருப்-2 பிரிவில், ஸ்காட்லாந்து அணியும், ஏ பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் அணியும் வரும். அயர்லாந்து அணிக்கு அடுத்து நமிபியா அணியுடன் கடைசிப் போட்டி இருக்கிறது இதில் வென்றால் குரூப்-2 பிரிவில் இடம் பிடிக்கும்.

இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை பேட்டிங்கில் 71 (47பந்துகள், 10பவுண்டரி, ஒருசிக்ஸர்) ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய ஹசரங்கா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையின் வெற்றிக்கு ஹசரங்கா, நிசாங்கா இருவரும்தான் முக்கியமானவர்கள். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு நிசாங்கா, ஹசரங்கா இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 123 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். தொடக்க ஆட்டக்கார்ர நிசாங்கா 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவர்கள் தவிர இலங்கை அணியில் கேப்டன் சனகா 21 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றைய இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்த முறையும் இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கவில்லை.கடந்த போட்டியில் காப்பாற்றிய ஹசரங்கா மட்டுமே இந்த ஆட்டத்திலும் கை கொடுத்தார்.

சூப்பர்-12 சுற்றுக்குள் செல்லும் இலங்கை அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பது போட்டி தொடங்கும் முன்பே தோல்வியை முடிவை எழுதுவதுபோல் இருக்கிறது. குஷால் பெரேரா, சந்திமால், அவிஷ்கா பெர்னான்டோ, ராஜபக்ச ஆகியோர் இந்த ஆட்டத்தில் நம்பி்க்கையளிக்கத் தவறினர். பீல்டிங்கிலும் இலங்கை அணி படுமந்தமாக இருக்கிறது, இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் பல பீல்டிங்கை கோட்டைவிட்டு ரன்களை கட்டுப்படுத்த தவறினர்.

வலுவான சுழற்பந்துவீச்சு இலங்கை அணிக்கு முக்கிய பலமாகும். இந்த ஆட்டத்தில் ஹசரங்கா, தீக்சனா, குமாரா ஆகிய மூவருமே சிறப்பாகப் பந்துவீசினர். கடந்த போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய தீக்சனா இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குமாரா 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

வேகப்பந்துவீச்சாளர்கள் கருணாரத்னே 2 விக்கெட்டுகளையும் சமீரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அயர்லாந்து அணியைப் பொறுத்தவரை உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது தடுமாறுவது இன்னும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கத்துக்குட்டியாக இருப்பது தெரிகிறது.

அந்த அணில் கேப்டன் பால்பிர்னி 41 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். கடைசி 16 ரன்களுக்கு அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான தோல்வியைச் சந்தித்தது. 85 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த அயர்லாந்து அடுத்த 16 ரன்களுக்குள் மீதமிருந்த விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.

அயர்லாந்து அணியின் அனுபவ வீரர்களான பால் ஸ்ட்ரிங்(7), கெவின் ஓ பிரையன்(5), டெலானி(2) விரைவாக ஆட்டமிழந்தனர்.

கடந்த ஆட்டத்தில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குர்டிஸ் ஹேம்பர் இந்த ஆட்டத்தில் எந்த விக்கெட்டையும் வீழ்த்தவி்ல்லை, பேட்டங்கில் 24 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கேப்டன் பால்பிர்னி, குர்டிஸ் இருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் சேர்த்தனர், மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் சொற்பமாக ஆட்டமிழந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x