Last Updated : 21 Oct, 2021 07:28 AM

 

Published : 21 Oct 2021 07:28 AM
Last Updated : 21 Oct 2021 07:28 AM

உறுதியானது ப்ளேயிங் லெவன்?: ரோஹித், விளாசல்; ஆஸி.யை அடக்கிய அஸ்வின்: 2-வது பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி


ரோஹித் சர்மாவின் அரைசதம், ராகுலின் அதிரடி ஆட்டம், அஸ்வினின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில்5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. 153 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 2 விக்கெட்டுகளை 153 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

ஏற்கெனவே முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும் இந்திய அணி வென்றது. இந்த ஆட்டத்தில் விராட் கோலிக்குப் பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் பதவி ஏற்றார்.

இந்திய அணி கடந்த இரு போட்டிகளிலும் தொடக்க வரிசைக்கு யார், நடுவரிசைக்கு எந்த பேட்ஸ்மேன்கள் என்ற இறுதியான தீர்மானத்துக்குவந்துள்ளது. ரோஹித் சர்மா, ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று தெரிந்துவிட்டது.

அதைத் தொடர்ந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. பந்துவீ்ச்சாளர்கள் தேர்வு என்பது சூழலுக்கு ஏற்ப முடிவாகும். இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருக்கும் அணிகளுக்கு எதிராக அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படும், மற்ற போட்டிகளில் ராகுல் சஹருக்கு வாய்ப்புக் கிடைக்கும எனத் தெரிகிறது.

இந்தியத் தரப்பில் அஸ்வின், ஜடேஜா, ராகுல்சஹர் மூவரின் பந்துவீச்சும் கடந்த இரு போட்டிகளிலும் மனநிறைவாக இருந்தது. கடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் விட்டுக் கொடுத்த புவனேஷ்வர் இந்த ஆட்டத்தில் லைன் லென்த்தில் வீசி திணறவிட்டார், மீண்டும் தன்னுடைய இயல்பான பந்துவீச்சுக்கு திரும்பியுள்ளார்.

வருண் சக்ரவர்த்திக்கு 2 ஓவர்கள் கொடுத்தபோதிலும் ரன்களை கட்டுப்படுத்தும் வகையில் வீசவில்லை. வருண் புதிரான பந்துவீச்சாளர் அவரின் பந்து எப்படி வரும் என யூகிப்பது கடினம் என்பதால் ஒரு போட்டியை வைத்து முடிவு எடுப்பது கடினம்.

கூடுதல் பேட்ஸ்மேன்கள் அணிக்குள் கொண்டுவந்தால் பந்துவீசுவதற்கு ஆள் தேவை என்பதால் என்னவோ விராட் கோலியும் நேற்று பந்துவீசினார், 2ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்தார். ஷர்துல் தாக்கூர் 3 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து சிறிது தாராளமாகவே நடந்துகொண்டார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா, ஷமி இடம் உறுதியாகியுள்ளது, இதில் இந்திய அணி 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கப்போகிறதா அல்லது அஸ்வின், ஜடேஜா இருவரை மட்டும் வைத்துக் கொண்டு, புவனேஷ்வர் குமாரைச் சேர்த்து 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கப்போகிறதா என்பதுதான் கேள்வி.

இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகமிருக்கும் அணிக்கு எதிராக அஸ்வின் கண்டிப்பாகத் தேவை என்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் களமிறங்கவைக்க மென்ட்டர் தோனி என்ன முடிவு எடுப்பார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா பயிற்சி ஆட்டத்தில்கூட பந்துவீசவில்லை என்பதால், ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகவே அணிக்குள் இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்தப் பயிற்சி ஆட்டத்தைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினர். ராகுல் 31 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து அகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.முதல் விக்கெட்டுக்கு இருவரும் 68 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ், ரோஹித்துடன் சேர்ந்தார். சூர்யகுமார் கடந்த போட்டியில் ஏமாற்றத்தை அளித்தநிலையில் இந்தப் போட்டியில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முதலில் நிதானமாக ஆடி, பின்னர் அவ்வப்போது ஷாட்கலை ஆடத் தொடங்கினார்.

அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்ற ரோஹித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்கள்(3சிக்ஸர்,5பவுண்டரி) சேர்த்த நிலையில் ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 127 ரன்கள் சேர்த்திருந்து.

பினிஷிங் பணி ஹர்திக் பாண்டியாவுக்கு அளிக்கப்பட்டிருப்பதால், சூர்யகுமார் யாதவுடன் பாண்டியா சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சூர்யகுமார் யாதவ், 27 பந்துகளில் 38 ரன்களும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலியஅணியைப் பொறுத்தவரை பந்துவீச்சிலும் பெரிதாக எந்த வீரரும் சிறப்பாக வீசவில்லை. பயிற்சி ஆட்டத்திலும் பந்துவீசிய 8 வீரர்களும் சராசரியாக ஓவருக்கு 8 ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.

மிட்ஷெல் ஸ்டார்க், கம்மினஸ், ஸ்டாய்னிஷ், ரிச்சார்ட்ஸன் ஆகியோர் ஓவருக்கு சராசரியாக 8 ரன்கள் வாரி வழங்கினர். ஆஸ்டின் அகர், ஆடம் ஸம்ப்பா இருவரும்ஓரளவுக்கு சுமாராகப் பந்துவீசினர். இ்ந்திய பேட்ஸமேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சு பயிற்சி ஆட்டத்தில் அமையவில்லை.

பேட்டிங்கிலும் இதே நிலைதான் நீடித்தது. டாஸ்வென்ற கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். வார்னர், பின்ச் களமிறங்கினர். அஸ்வின் வீசிய 2-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி வார்னர் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஐபிஎல் தொடரிலிருந்து டேவிட் வார்னரின் மோசான ஃபார்ம் தொடர்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

அடுத்துவந்த மிட்ஷெல் மார்ஷ் வந்தவேகத்தில் ரோஹித்சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் கிடைத்தன.

ஜடேஜா வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் ஆரோன் பின்ச் 8 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியஅணி தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தனர். ஐபிஎல் தொடரிலிருந்து அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும்மேக்ஸ்வெல் பயிற்சி ஆட்டத்திலும்நம்பிக்கை ஏற்படுத்தினார்.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விச் ஹிட் ஷாட்களை ஆடி பவுண்டரி அடித்தார். சஹர் வீசிய ஓவரில் மேக்ஸ்வெல் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 61 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த ஸ்டாய்னிஷ், ஸ்மித்துடன் சேர்ந்தார். உடற்தகுதியுடன் வந்த ஸ்டாய்னிஷ் அதிரடியான ஷாட்களை ஆடத் தொடங்கினார். இருவரும் ஜோடி சேர்ந்தபின் ஓரளவுக்கு ஸ்கோர் வேகமெடுத்தது. ஸ்மித் 48 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்த நிலையில் புவனேஷ்வர் ஓவரில் விக்கெட்டை இழந்தார். ஸ்டாய்னிஷ் 25 பந்துகளில் 41 ரன்களுடனும், மேத்யூ வேட் 4ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x