

கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் பணம் இல்லாவிட்டால் நான் இந்நேரம் பெட்ரோல் பங்க்கில்தான் வேலை செய்துகொண்டிருப்பேன் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
குஜராத்தின் பரோடோவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, சிறிய குடியிருப்பில் வாழ்ந்து வந்தவர்கள் ஹர்திக் பாண்டியா, அவரின் சகோதரர் குர்னல் பாண்டியா. ஆனால் இருவரும் இந்திய கிரிக்கெட் அணிக்கும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டபின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.
மும்பையில் இன்று ஹர்திக்,குர்னல் இருவருக்கும் சொகுசு வீடுகள்,கார், பணம் என வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில்எடுக்கப்பட்ட பாண்டியாவின் ஆட்டம், ஃபினிஷிங் ஸ்டைல் ஆகியவற்றைப் பார்த்து அவருக்கு ரூ.11 கோடி கொடுத்து தக்கவைத்தது. குர்னல் பாண்டியாவுக்கு ரூ.9 கோடி கொடுத்து தக்கவைத்தது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்.
ஆனால், வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் கடந்தகாலத்தை தான் மறக்கவில்லை, அந்த எளிமையை மறக்கவில்லை என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். பணம் ஒருவரை எந்த சூழலிலும் மாற்றக்கூடாது, அவரின் இயல்பிலிருந்து பின்வாங்கக்கூடாது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கிரிக்கெட்டில் பணம் இன்றைய இளைஞர்கள் மீது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுஎனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது:
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நானும், எனது சகோதரரும் விளையாடத் தொடங்கிபின் பணம் ஏராளமாகக் கிடைத்தது. ஆனால் ஒருபோதும் எங்கள் பாதத்தை தரையிலிருந்து தூக்கிப் பறக்கவில்லை. நாங்கள் எப்போதும் எங்கள் நிலையறிந்துதான் நடக்கிறோம்.
கிரிக்கெட்டில் மட்டும் பணம் இல்லாவிட்டால் இன்று நான் ஏதாவது ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து கொண்டிருப்பேன். என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வலிமையான புத்தி வேண்டும். எனக்கும் குர்னல் பாண்டியாவுக்கும் அது அதிகம்.அதனால்தான் பணம் எங்களுக்கு கிடைத்தாலும் உண்மைைய,நிதர்சனத்தை அறிந்து கொண்டோம். அதனால்தான் ஒருபோதும் தரையிலிருந்து காலை தூக்கி உயரே பறக்கவில்லை. நான் பறப்பதுபோன்று பலருக்குத் தெரியலாம் ஆனால், முடிவில் நான் நிலையறிந்துதான் நடப்பேன், என் கால் தரையில்தான் இருக்கும்.
பணம் நல்லது சகோதரரே. பணம் ஏராளமானவற்றை மாற்றியிருக்கிறது. அதற்கு நான்தான் உதாரணம். மற்றவகையில், பணம் இல்லாவிட்டால் நான் பெட்ரோல் பங்க்கில்தான் இருப்பேன். நான் நகைச்சுவைக்காக கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை என் குடும்பம் முக்கியம், அவர்களுக்கு நல்ல வாழ்க்கையைத் தர வேண்டும்.
விளையாட்டை வாழ்க்கையாக எடுத்து இளைஞர்கள் சாதிக்க பணம் முக்கியமானது. ஆனால், கிரிக்கெட்டில் பணம் மட்டும் இல்லாவிட்டால் எத்தனை இளைஞர்கள் இந்தவிளையாட்டை ஆர்வமாக விளையாடுவார்கள்
கடந்த 2019-ம்ஆண்டு நான் ஒரு நண்பரிடம் பேசும்போது, அவர் என்னிடம் கிரிக்கெட்டில் பணம் இருக்கக்கூடாது, நீங்கள் எல்லாம் இளம் வீரர்கள் என்றார். எனக்கு அவரின் பேச்சில் உடன்பாடில்லை. உடனே நான்அவரிடம், “ ஒரு சிறிய கிராமம், சிறிய நகரிலிருந்து ஒரு வீரர் பெரிய ஒப்பந்தத்துடன் வருகிறார், அவர் தனக்காக விளையாடவரவில்லை,குடும்பத்துக்காக உறவினருக்காக வருகிறார் என்றேன்.
பணம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரம் ஊக்கத்தையும் அளிக்கிறது. பணத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்று தவறான கருத்து இருக்கிறது.
இவ்வாறு ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.