Published : 04 Jun 2014 04:17 PM
Last Updated : 04 Jun 2014 04:17 PM

உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் ஒரு பார்வை

உலகக் கோப்பைக் கால்பந்து ஜி-பிரிவு அணிகளில் சுவாரசியம் என்னவெனில் இந்தப் பிரிவில் உள்ள 4 அணிகளும் கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய அணிகள்.

அதேபோல் பி-பிரிவு அணிகளும் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிய அணிகள்.

ஜி-பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுக்கல், கானா, யு.எஸ். ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பார்க்கும்போது இந்தப் பிரிவிலிருந்து ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் சுலபமாக இறுதி-16 சுற்றுக்கு முன்னேறும் என்று கூறிவிடலாம் போல் தெரிகிறது.

ஆனால் கானா, யு.எஸ். அணிகள் அதனை அவ்வளவு சுலபமாக்கிவிடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

7 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளைச் சந்தித்துள்ள ஜெர்மனி அணி இந்த முறை பிரேசிலில் லத்தீன் அமெரிக்க அணிகளின் ஆதிக்கத்தின் முன் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறப்பட்டாலும், அவ்வளவு சுலபமாக ஜெர்மனியை வெளியேற்றிவிட முடியாது.

காரணம் பயிற்சியாளர் ஜோகிம் லூ ஒரு அருமையான உத்தி வகுப்பாளர். 4-2-3-1 என்ற முறையில் மைதானத்தில் வீரர்களை விளையாட வைப்பவர். அதாவது ஒரு பேக்கி, 3 பேர் பாதுகாப்பு அரண், 2 பேர் இடது மற்றும் வலது விங்குகளைக் கவனித்துக் கொள்ள முன் களத்தில் தாக்குதல் ஆட்டம் ஆட 4 வீரர்கள். இதுதான் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோகிம் லூவின் உத்திவகுப்பு.

பாஸ்டியன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் மற்றும் சேமி கேதிரா, நடுக்களத்தில் சுறுசுறுப்பாக இயங்க, மெசுட் ஓசில், தாமஸ் முல்லர் ஆகியோர் முன்களத்தில் ஆக்ரோஷம் காட்டுவார்கள். இவர்கள் தவிர ஜூலியன் டிராக்ஸ்லர், மத்தியாஸ் ஜிண்டர், மரியோ கோட்ஸே, கிறிஸ்டோப் கிரேமர், ஆந்த்ரே ஷுயெர்லி, லுகாஸ் பொடோல்ஸ்கி ஆகிய வீரர்களும் உள்ளனர்.

இவர்கள் தவிர மிக முக்கியமான மிரோஸ்லாவ் க்ளோஸ் என்ற நட்சத்திர ஸ்ட்ரைக்கர் உள்ளார். இவர் ரொனால்டோவின் உலகக் கோப்பை கோல் சாதனையான 15 கோல்கள் சாதனையை எட்ட க்ளோஸிற்கு இன்னும் ஒரு கோல்தான் உள்ளது. பலமாகவே தெரிந்தாலும் தடுப்பு வீரர்கள் மட்டத்தில் ஜெர்மனி பலவீனமான அணியாகவே திகழ்கிறது. சமீபத்திய தகுதிச் சுற்றுப்போட்டிகளில் ஸ்வீடனுக்கு எதிராக 2 போட்டிகளில் 7 கோல்களை வாங்கியுள்ளனர். ஆனால் மொத்தமாக 10 போட்டிகளில் 9-இல் வென்றுள்ளனர்.

போர்ச்சுக்கல்:

போர்ச்சுக்கல் என்றாலே கிறிஸ்டியானோ ரொனால்டோ நினைவுதான் அனைவருக்கும் வரும். அவருடன் பெபே, ஜோவா மௌட்டின்ஹோ ஆகியோரும் உள்ளனர்.

உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் உள்ளது போர்ச்சுக்கல். போர்ச்சுக்கல் அணியில் ஸ்ட்ரைக்கர், உத்தி வகுப்பது, உத்வேகம் அளிப்பது அனைத்துமே களத்தில் செய்ய வேண்டிய பொறுப்பு கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இருக்கிறது. இது அவரது ஆட்டத்தைப் பாதித்தாலும் பாதிக்கலாம்.

யூரோ 2012 அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணி போர்ச்சுக்கல்.

கானா:

2010 உலகக் கோப்பைப் போட்டிகளில் முதன் முறையாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றதால் கானா அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது உறுதி. 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்திய கானா அதற்கு அடுத்த உலகக் கோப்பையில் ஒரு அடி முன்னேறி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

இந்த முறை உலகின் 2 மிகப்பெரிய அணிகளுக்கு எதிராக குரூப் மட்டத்தைத் தாண்டுவதே அரிதுதான் என்று கூறலாம். அனுபவமிக்க அணியான கானா, நல்ல பார்மில் உள்ளது. அதிக வெற்றிகளை ஆப்பிரிக்க போட்டிகளில் பெற்றுள்ளது. மேலும் மிகேல் எஸியன் அணிக்குத் திரும்பியுள்ளதும் அந்த அணிக்குப் பலத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யு.எஸ்:

தொடர்ந்து 7வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுகிறது யு.எஸ். 1930ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் முடிவில் 3ஆவது இடம் பிடித்த யு.எஸ். அணி 1990 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தகுதி பெற்று வருகிறது. 2002ஆம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்குமா யு.எஸ். என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x