Last Updated : 17 Oct, 2021 04:48 PM

 

Published : 17 Oct 2021 04:48 PM
Last Updated : 17 Oct 2021 04:48 PM

தோனிக்குத்தான் முதல் வாய்ப்பு; கப்பலுக்கு கேப்டன் அவசியம்: சிஎஸ்கே நிர்வாகம் சூசகம்

ஐபிஎல் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் தோனி | படம் ஏஎன்ஐ

புதுடெல்லி


2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தக்கவைக்கும் கார்டு முதன்முதலில் தோனிக்காகவே பயன்படுத்தப்படும் என்று சிஎஸ்கே அணியின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி " நீங்கள் என்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதைப் பார்க்கலாம். ரசிகர்கள் எனது கடைசி ஆட்டத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படித்தான் விடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

ஆனால், அடுத்த சில நாட்களில் பேட்டி அளித்த தோனி, “ அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் ஆடையில் பார்க்கலாம். ஆனால், சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என எனக்குத் தெரியாது. அடுத்த சீசனில் புதிதாக இரு அணிகள் வருகின்றன என்பதால், ஏராளமான நிச்சயமற்ற தன்மைகள் சுற்றி இருக்கின்றன. எந்த மாதிரியான தக்கவைப்புக் கொள்கை இருக்கும் என எங்களுக்குத் தெரியாது.
எத்தனை வெளிநாட்டு வீரர்களை, உள்நாட்டு வீரர்களைத் தக்கவைக்கப் போகிறார்கள் என எனக்குத் தெரியாது. ஏராளமான நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றபின் தோனி அளித்த பேட்டியில், “ நான் மறுபடியும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது பிசிசிஐ முடிவின் அடிப்படையில் இருக்கிறது. எந்த முடிவு எடுத்தாலும் அணியி்ன் நலனுக்காகவே எடுப்போம். இந்த முறையைவிட அடுத்த ஆண்டு சீசனில் கூடுதலாக இரு அணிகள் வருகின்றன அதற்கு ஏற்றார்போல் வீரர்களைத் தயார் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் தோனி அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா அல்லது ஓய்வை அறிவிப்பாரா அல்லது மென்ட்டராக பணியாற்றுவாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி சார்பில் 4 வீரர்களைத் தக்கவைக்க முடியும் அதுகுறித்து சிஎஸ்கே அணியின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் “ ஐபிஎல் ஏலத்தில் நாங்கள் தக்கவைப்பு கார்டை முதலில் தோனிக்காகவே பயன்படுத்துவோம். இதுதான் உண்மை. ஆனால் எத்தனை வீரர்களை தக்கவைப்போம் என எனக்குத் தெரியாது. நாங்கள் தக்கவைக்கும் முதல் வீரர் தோனியாகத்தான் இருப்பார். கப்பலுக்கு முதலில் கேப்டன் தேவை. மற்றவீரர்கள் அடுத்தடுத்து வந்து விடுவார்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x