

டி 20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த நிலையில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியான கட்டத்தில் நேற்று பாகிஸ்தான் அணியுடன் மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
ஆனால் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காலை 9 மணியில் இருந்து ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை, மாலை நேரத்திலும் பெய்தது. இதனால் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவியது. மைதானத்தில் ரசிகர்களும் போட்டி ரத்தாகிவிடுமோ என்ற அச்சத்தில் உறைந்திருந்தனர்.
ஒருவழியாக 6.45 மணி அளவில் மழை ஓய்ந்த நிலையில் மைதானத்தில் இருந்த கவர்கள் அகற்றப்பட்டு, ஆடுகளத்தின் புறவெளிப்பகுதிகளில் இருந்த தண்ணீர் அகற்றப்பட்டது. ஆடுகளம் மற்றும் மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் போட்டி, 18 ஓவர்களை கொண்டதாக நடத்தப்படும் என்றும் அறிவித் தனர்.
இதன் பின்னரே ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டி ருந்தது. இமாத் வாசிம் நீக்கப்பட்டு முகமது சமி சேர்க்கப் பட்டார்.
இதற்கிடையே இந்த போட்டியையொட்டி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் சார்பில் முன்னாள் ஜாம்பவான்கள் இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர், சேவாக் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மேற்குவங்க கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி, டி 20 உலகக் கோப்பை டிராபியை எடுத்து வர இரு அணி வீரர்களும் அணிவகுத்து நின்றனர். பின்னர் இந்திய தேசிய கீதத்தை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், பாகிஸ்தான் பாடகர் ஷபாகத் அமானத் அலி அந்நாட்டு தேசிய கீதத்தையும் பாடினர். இதையடுத்து போட்டி ஆரம்ப மானது.