Last Updated : 14 Oct, 2021 12:50 PM

 

Published : 14 Oct 2021 12:50 PM
Last Updated : 14 Oct 2021 12:50 PM

ஸ்டீபென் பிளெம்மிங்கின் ‘குளோன்’ வெங்கடேஷ்: டேவிட் ஹசி புகழாரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் | படம் உதவி ட்விட்டர்

ஷார்ஜா


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க ஆட்டக்கார்ர வெங்கடேஷ் ஐயர், நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபென் பிளெம்மிங்கின் குளோனிங் போன்று இருக்கிறார். சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று அணியின் மென்ட்டர் டேவிட் ஹசி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது.

136 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து 3 விக்ெகட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

136 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடைவதற்கு அடித்தளம் அமைத்தது இளம் வீரர் வெங்கடேஷ் அய்யர்தான். இந்தியாவில் நடந்த முதல் சுற்றில் வெங்கடேஷுக்கு கொல்கத்தா அணியில் வாய்ப்புக் கிடைக்கவி்ல்லை, ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஒவ்வொரு போட்டியிலும் எதிரணிக்கு சிம்ம சொப்னமாகத் திகழ்ந்தார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் 320 ரன்கள் குவித்துள்ளார், இதில் 3 அரைசதம், 125 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

அதிரடியாக ஆடும் வழக்கமுடைய வெங்கடேஷ் நேற்றைய ஆட்டத்திலும் அதை வெளிப்படுத்த தவறவில்லை. 41பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர், 4பவுண்டரி அடங்கும். கில்,வெங்கடேஷ் ஆட்டத்தால் பவர்ப்ளேயில் கொல்கத்தா விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்து ஏற்ககுறைய பாதி இலக்கை அடைந்துவிட்டது. வெற்றிக்கு அடித்தளமிட்ட வெங்கடேஷுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

'டேவிட் ஹசி

கொல்கத்தா அணிக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக வெங்கடேஷ் உருவெடுத்து வருகிறார். வெங்கடேஷ் குறித்து கொல்கத்தா அணியின் ஆலோசகர் ஆஸி. முன்னாள் வீரர் டேவிட் ஹசி கூறியதாவது:

வெங்கடேஷ் அய்யர் என்ற வீரரைக் கண்டுபிடித்திருக்கிறோம், அருமையான வீரர் மட்டுமல்ல அற்புதமான மனிதர். தான் சந்திக்கும் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடத் தொடங்கி விடுகிறார் வெங்கடேஷ். அவர் அடித்த சில சிக்ஸர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டு, வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது.

எங்களின் தொடக்க வீரர்கள் கில், வெங்கடேஷ் இருவரும் போட்டிபோட்டு சிறப்பாக ஆடுகிறார்கள். தரவரிசையில் சிறந்தவீரராக வெங்கடேஷ் உள்ளார், உயரமாக, நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங் குளோன் போன்று வெங்கடேஷ் உள்ளார் என நான் நம்புகிறேன். வெங்கேடஷுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட திறமையுள்ள வீரர்களை களமிறக்குவோம். ரஸலும் காயத்திலிருந்து குணமடைந்துவிடுவார். முதலில் மருத்துவ குழுவினருடன் பேசியபின்பு தெரியவரும், பயிற்சியில் ரஸல் பங்கேற்கத் தொடங்கிவிட்டார். நிச்சயமாக ரஸல் விளையாட வாய்ப்புள்ளது. சஹிப் அல் ஹசனும் அணியில் இருப்பார்.

எங்களின் கடை இரு போட்டிகளிலும் வெல்ல சஹிப் முக்கியக் காரணம். இறுதி ஆட்டத்துக்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்பது கடினமான பணிதான். சிஎஸ்கே அணிக்காக திட்டமிடலைச் சரியாகச் செய்ய வேண்டும். இரு அணிகளுமே வலுவான அணிகள், வாய்ப்பு இருவருக்கும் சமமாக இருக்கிறது. இறுதிப்போட்டியி்ல் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.

இவ்வாறு டேவிட் ஹசி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x