

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஹோண்டுராஸ் அணி தனது 3 ஆட்டங்களிலும் தோற்றதையடுத்து அதன் பயிற்சியாளர் லூயிஸ் பெர்னாண்டோ சுரேஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஹோண்டுராஸ் அணியை சாதிக்க வைக்க முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகக் கோப்பை போட்டியில் மிகப்பெரிய கனவுகளை வைத்திருந்தேன். ஆனால் அது நடக்காமல் போனது வருத்தமளிக்கிறது. கடைசி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தைவிட எங்கள் அணியே நீண்ட நேரம் பந்தை கட்டுக்குள் வைத்திருந்தபோதும், வெற்றி பெற முடியவில்லை. நல்ல மனசாட்சியுடன் பயிற்சியாளர் பணியில் இருந்து விடை பெறுகிறேன். இதை தோல்வியாக நான் நினைக்கவில்லை. சிறப்பாக செயலாற்றினேன் என்ற ஆத்ம திருப்தியுடன் விடைபெறுகிறேன்.
இப்போதைய ஹோண்டுராஸ் அணி சிறந்த அணிதான். அடுத்து வரும் பயிற்சியாளர் அணியை முன்னேற்றுவதற்கு தேவையான பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். புதிதாக வரும் பயிற்சியாளர் ஹோண்டுராஸ், சிறந்த அணி என்பதை நிச்சயம் உணர்வார்” என்றார்.
2006 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறிய ஈகுவடார் அணிக்கு பயிற்சியாளராக இருந்த சுரேஜ், 2011-ல் ஹோண்டுராஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.