Last Updated : 07 Mar, 2016 01:05 PM

 

Published : 07 Mar 2016 01:05 PM
Last Updated : 07 Mar 2016 01:05 PM

மைதானத்தில் ஆடுவதை விட கிரிக்கெட் ஆட்டம் டிவி-யில் பார்க்க சுலபமானது: தோனி

மற்றெந்த விவகாரங்களை விடவும் கிரிக்கெட்டை பற்றி கருத்து தெரிவிப்பதில் இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் மிகவும் தாராளமாக செயல்படுகிறது என்று ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இந்தியாவில் ஒவ்வொருவரும் கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிக்க விரும்புகின்றனர் என்றே நான் கருதுகிறேன். கருத்துச் சுதந்திரம் உள்ளது, அதனால் ஒவ்வொருவருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது. அதாவது இப்படிச் செய், அப்படிச் செய், இப்படி விளையாடு, அப்படி விளையாடு என்று கூறப்படுகிறது. பிரச்சினை என்னவெனில் டிவி.யில் பார்க்க கிரிக்கெட் மிக எளிதாகவே இருக்கும் மைதானத்தில் ஆடுவதை விட.

நிறைய விமர்சனங்கள் எழுகின்றன. என்னை யாராவது, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டால் இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடுவதே எனது முதல் தெரிவு என்று கூறியிருப்பேன். நான் வேறு எந்த நாட்டுக்கு விளையாட மாட்டேன்.

இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி என்பதே பரபரப்பான தலைப்பாகும், இந்தியா இறுதியில் வென்றது என்பது அல்ல. வெற்றி பெற்றால் இது என்ன பெரிய விஷயம் வென்றுதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் கருத்து வெளியாகும், தோற்றால் வங்கதேசத்திடம் தோற்கலாமா என்று கேள்விகள் எழும்.

அதாவது வெற்றி பெறுவது இயல்பான ஒன்று அதன் மூலம் முன்னெடுத்துச் செல்ல ஒன்றுமில்லை என்பது போல் இருக்கிறது சில விமர்சனங்களின் தர்க்கங்கள்.

2004-ல் இருந்த வங்கதேச அணியல்ல இது. இப்போது அவர்களிடம் மிகச்சிறந்த அணி உள்ளது. அந்த அணி திறமையில் முன்னேற்றம் கண்டுள்ளது, இது அவர்களின் ஆட்டத்தில் வெளிப்படுகிறது. எனவே இவர்களை வீழ்த்தி வெற்றி பெறுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த தொடரில் வங்கதேசத்திடம் அடைந்த தோல்வி குறித்து...

நிகழ்காலத்தில் நிற்பதே நமக்கு உதவும். கடந்த காலத்தை நினைத்தால் காயம்தான் நம் மனதை தாக்கும். எனவே அதனை மறப்பதே நல்லது. அதிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும் என்பதைத் தவிர அவற்றைப் போட்டு உழப்பிக் கொள்வதில் ஒன்றுமில்லை.

பெரிய ஷாட்கள் பற்றி...

சுரேஷ் ரெய்னா அல்லது ரோஹித் சர்மா போன்றவர்கள் முதல் பந்திலிருந்தே பெரிய ஷாட்களை ஆடக்கூடியவர்கள். ஆனால் பின்னால் களமிறங்கும் போது எடுத்த எடுப்பிலேயே பெரிய ஷாட்களை ஆடுவது கடினம். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது, பந்தும் சற்றே மென்மையாக இருக்கும்.

ஒரு 10 இன்னிங்ஸ்களில் நான் 5 இன்னிங்ஸ்களை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பவனாக இருக்கிறேன் என்றால் இதனை 10-ல் 7 முறை நிகழ்த்திக் காட்டும் வீரர்கள் உள்ளனர். நாம் தனிப்பட்ட வீர்ர்களை நிறைய விமர்சனம் செய்கிறோமே தவிர அவர்களுக்கான நியாயம் எதையும் வழங்குவதில்லை. நாம் பொதுவாக புள்ளி விவரங்களை வைக்கிறோம், ஆனால் கடந்த 50 ஆண்டுகளின் புள்ளி விவரங்களை நான் பார்க்க விரும்புகிறேன், எவ்வளவு போட்டிகளை எவ்வளவு பேர் வெற்றியாக முடித்துக் கொடுக்கிறார்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

மொகமது ஷமி அணிக்கு வந்தால்...

மொகமது ஷமி அணிக்கு வந்தால் ஆஷிஷ் நெஹ்ரா இடத்தில் மட்டுமே அவர் வர முடியும், ஆனால் நெஹ்ராவை இப்போதைக்கு நாம் விலக்க முடியாது, பும்ராவை நீக்குவதற்கு வாய்ப்பேயில்லை, ஏனெனில் அவர் புதிய பந்து, பழைய பந்து என்று யார்க்கர்களை நினைத்த போது வீச முடிகிறது. முதலில் ஷமி தனது உடல்தகுதியை பயிற்சிப் போட்டிகளில் நிரூபிக்க வேண்டும், பிறகு நாம் முடிவெடுப்போம்.

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x