

இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மே.இ.தீவுகள் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் காயம் காரணமாகக் களமிறங்காதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரரான கிறிஸ் கெயில், பெங்களூருவை தனது சொந்த ஊர் என்றே கூறியிருந்தார், ஆனால், இலங்கை பேட்டிங் செய்த போது காயமடைந்தார். சிறிவதனா கேட்சைப் பிடிக்கும் போது கெயில் காயமடைந்தார். பெவிலியனுக்குத் திரும்பினார். இதனால் அவரை களமிறக்கி ரிஸ்க் எடுக்க மே.இ.தீவுகள் விரும்பவில்லை, மேலும் இலங்கை எடுத்த 122 ரன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால் பிற்பாடு களமிறக்கிக் கொள்ளலாம் என்று மே.இ.தீவுகள் நிர்வாகம் நினைத்தது.
ஆனால், இதனை ரசிகர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். இதனால் கெயில் பெயரைச் சொல்லி தொடர்ந்து கோஷம் எழுப்பியபடியே இருந்தனர் ரசிகர்கள். ‘வீ வான்ட் கெயில்’ என்று அவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்தனர்.
3-வது விக்கெட் விழுந்தவுடன் களமிறங்க கெயில் ஆசைப்பட்டார். ஆனால், இன்னும் கொஞ்சம் நேரம் ஆக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார். காயமடைந்து பெவிலியன் சென்றால் அவர் மீண்டும் களமிறங்க சில விதிமுறைகள் உள்ளன. அதன் படி கெயில் இறங்க முடியவில்லை, அதற்குள் மே.இ.தீவுகளும் வெற்றியை எட்டியது.
கெயில் இடத்தை ஆந்த்ரே பிளெட்சர் நிரப்ப முயன்றார். 64 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்சர்கள் என்று இவர் 84 ரன்கள் விளாசி இறுதி வரை அவுட் ஆகாமல் மே.இ.தீவுகளை வெற்றி பெறச் செய்தார்.
டாஸ் வென்ற டேரன் சமி முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார். இலங்கை அணி சாமுயெல் பத்ரியிடம் (3/12) திரிமானே கபுகேதரா, சிறிவதனா ஆகியோரை இழந்து முன்னதாக சந்திமால் ரன் அவுட் ஆக, தில்ஷன் பிராத்வெய்ட் பந்தில் எல்.பி. ஆக 47/5 என்று ஆனது. இதில் திலகரத்ன தில்ஷனுக்கு நடுவர் ஜோஹன் குளொயீட் எல்.பி.கொடுத்தது அபத்தம், பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தாகும்.
பிறகு மேத்யூஸ், பெரேரா இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 44 ரன்கள் சேர்த்தனர். திசர பெரேரா 29 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்தார். இவரால் இவ்வளவு சுதந்திரமாக ஆட முடிந்தது ஏன் மற்ற வீரர்களால் முடியவில்லை என்பது புதிராக இருந்தது. ஒரு வேளை பிக் ஹிட்டிங் மே.இ.தீவுகளுக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று தங்களுக்குள்ளேயே பெரிய சுமையை ஏற்றிக் கொண்டு சோபிக்க முடியாமல் போயிருக்கலாம்.
122 ரன்கள் இலக்கைத் துரத்த மே.இ.தீவுகள் களமிறங்கியது, பிளெட்சர், சார்லஸ் ஆகியோர் இறங்கினர். பிளெட்சர் அதிரடியில் இறங்க சார்லஸ் 10 ரன்களிலும் சாமுயெல்ஸ் 3 ரன்களிலும் ராம்தின் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் சிறிவதனா 3 ஓவர்கள் 14 ரன்கள் 2 விக்கெட்டுகள் என்று சிக்கனம காட்டினார், இளம் ஸ்பின்னர் வாண்டர்சே 4 ஓவர் 1 மெய்டன் 11 ரன்கள் 1 விக்கெட் என்று சிக்கனம் காட்ட ஹெராத் 4 ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 48 ரன்கள் என்று ஓரளவுக்கு இலங்கைக்கு 25% வாய்ப்பிருப்பதாகவே தெரிந்தது.
இந்நிலையில்தான் 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்த சிறிவதனா தனது 4-வது ஓவரை வீச வந்தார். பிளெட்சர் சிக்சர்களை அடிக்க அந்த ஓவரில் 19 ரன்கள் வந்தது. மற்றதெல்லாம் சம்பிரதாயம்தான். 18.2 ஓவர்களில் மே.இ.தீவுகள் 127/3 என்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மே.இ.தீவுகள் 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
ஆட்ட நாயகனாக பிளெட்சர் தேர்வு செய்யப்பட்டார்.