Last Updated : 12 Oct, 2021 04:31 PM

 

Published : 12 Oct 2021 04:31 PM
Last Updated : 12 Oct 2021 04:31 PM

சமூக வலைதளத்தில் தாங்கள் பதிவிடும் கருத்தின் விபரீதத்தைச் சிலர் உணர்வதில்லை: தினேஷ் கார்த்திக் சாடல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் தினேஷ் கார்த்திக் | கோப்புப் படம்.

ஷார்ஜா

சிலர் சமூக வலைதளத்தில் தாங்கள் சொல்லும் கருத்தின் விபரீதத்தை உணராமல் பதிவிடுகிறார்கள் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதில் ஆர்சிபி ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் வீசிய ஒவரில்தான் நரேன் 22 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்சிபி ரசிகர்கள் சிலர், டேனியல் கிறிஸ்டியனின் காதலி ஜோர்ஜியா டானுக்கு எதிராகப் பல அவதூறான கருத்துகளைத் தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையானது. ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெலும் இதைக் கண்டித்து, “சமூக வலைதளத்தில் குப்பைகளைக் கொட்டாதீர்கள். நாங்களும் மனிதர்கள்தான். முடிந்த அளவு சிறப்பாக விளையாடினோம்” எனத் தெரிவித்தார்.

ஆர்சிபி அணி வீரர்களுக்கு ஆதரவாக கொல்கத்தா அணியும் கருத்துகளைத் தெரிவித்தது. அந்த அணி தனது ட்விட்டர் பதிவில், “வெறுப்புச் செய்திகளுக்குத் தடையிடுங்கள். கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி இதுபோன்று ஆன்லைன் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இதற்குத் தகுந்த எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறோம்.

விளையாட்டில் வெற்றி, தோல்வி ஒரு பகுதி. ஆர்சிபிக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். கிறிஸ்டியன், மேக்ஸ்வெலுக்கு ஆதரவாகவும் இருப்போம்” எனத் தெரிவித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் வேதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “சமூக வலைதளங்கள் இரக்கமுள்ள, கருணையுள்ள இடமாக மாற வேண்டியது அவசியம் என நான் உணர்கிறேன். அது மீம்ஸ், வீடியோஸ், வார்த்தைகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சிலர் தாங்கள் பேசும், பதிவிடும் வார்த்தைகள், கருத்துகளின் தீவிரத்தை, விபரீதத்தை உணர்வதில்லை.

அது அவர்களுக்கு வேண்டுமானால் உற்சாகமான தருணமாக இருக்கும். தங்களுடைய கருத்தைப் பதிவிட்டுவிட்டதாக மட்டும் உணர்கிறார்கள். இந்தச் செயலால், குறிவைக்கப்பட்டவர் என்ன விளைவுக்கு ஆளாவார் என்பதைக் கருத்தைப் பதிவிட்டவர் உணர்வதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x