Last Updated : 12 Oct, 2021 08:16 AM

Published : 12 Oct 2021 08:16 AM
Last Updated : 12 Oct 2021 08:16 AM

குவாலிஃபயரில்-2ல் கொல்கத்தா: 3 பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய நரேன் ஆர்சிபி 'சோக்கர்ஸ்': தோல்வியுடன் முடிந்தது கோலியின் கேப்டன் சகாப்தம்


சுனில் நரேனின் அற்புதமான பந்துவீச்சு, சூழலுக்கு தகுந்தார்போல் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்தது. 139 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2-வது தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி. இதில் வெல்லும் அணி ஃபைனலில் சிஎஸ்கே அணியுடன் கோப்பைக்காக கோதாவில் ஈடுபடும்.

ஆர்சிபி அணிகடந்த இரு சீசன்களாக ப்ளேஆஃப் சுற்றுக்குள் வந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் தோல்வியுடன் வெளியேறியது.

கோப்பையை வெல்ல முடியவில்லை

ஆர்சிபி அணிக்கு கடந்த 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் விராட் கோலியால் ஒரு கோப்பையைக்கூட வென்று கொடுக்க முடியவில்லை. சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன் கோலி என்பதில் ஐயமில்லை, ஆனால், எதையும் வெற்றியாக மாற்ற முடியவில்லை எனும் போது ஏதோ ஓர் இடத்தில் தவறு நேர்கிறது தெரிகிறது. கடந்த இரு சீசன்களிலும் ஆர்சிபி அணிக்கு சிறந்த வீரர்கள் அமைந்த போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.

ஆர்சிபி அணியில் ஒருவீரராகத் தொடர்வேன் என்று கோலி விஸ்வாசத்துடன் தெரிவித்தாலும் "ரேஸில்" தோல்வி அடைந்த குதிரையை வைத்துக் கொள்ள இனிமேலும் அணி உரிமையாளர்கள் விரும்பமாட்டார்கள். ஆதலால், ஆர்சிபி அணிக்கும், விராட் கோலிக்கும் இடையிலான உறவும், ஆர்சிபி அணிக்கு கேப்டன் என்ற கோலியின் சகாப்தம் இந்த சீசனோடு முடிந்தது?. அடுத்த சீசனில் ஆர்சிபிஅணிக்கு கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்பது யாருக்கும் தெரியாது, பெரும்பாலும் கையைச் சுட்டுக் கொண்டபின் அந்த பரிட்சையில் இறங்கமாட்டார்கள்.

ஆட்டநாயகன்

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் மட்டும்தான். சுனில் நரேன் வீழ்த்திய 4 விக்கெட்டுகள், கிறிஸ்டியன் ஓவரில் அவர் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஆட்டத்தின் போக்கையே கொல்கத்தா பக்கம் திருப்பியது. 4 விக்கெட்டுகள், 15 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்த சுனில் நரேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சுனில் நரேனுக்கு ஒத்துழைத்து வருண் சக்கரவர்த்தி, சஹிப் அல் ஹசன் இருவரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். இதில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், தனது ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடவில்லை, இதில் 7டாட் பந்துகள் அடங்கும்

சஹிப் அல் ஹசன் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்தார் இதில் 6 டாட்பந்துகள் அடங்கும். இந்த 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி ஒட்டுமொத்த ஆர்சிபி அணியின் ரன்ரேட்டின் கடிவாளத்தையே கைக்குள் அடக்கிவிட்டனர். இந்த மூவரும் 12 ஓவர்கள் வீசி 65 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர், இதில் 24 டாட் பந்துகள் அடங்கும்.

9 ஓவர்களில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்திருந்து. ஆனால், 3 சுழற்பந்துவீச்சாளர்களும் பந்துவீச வந்தபின், 6 விக்ெகட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
ஷார்ஜா ஆடுகளம் மெதுவானது, பந்து தாழ்வாக வரும், பேட்ஸ்மேனை நோக்கி மெதுவாகவே வரும் என்றாலும் அதிலும் தனது கட்டுக்கோப்பான வேகப்பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை லாக்கி பெர்குஷன் வீழ்த்தியது அருமையானது.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை கடந்த 1996ம் ஆண்டு இலங்கை அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது என்னவிதமான ஃபார்முலாவைப் பின்பற்றியதோ அதைத்தான் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பின்பற்றி வருகிறது.

1996 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் ஜெயசூர்யா, கலுவிதராணா முதல் கடைசி நிலையில் இருந்த சாமிந்தா வாஸ் வரை களமிறங்கினால் அதிரடி ஆட்டம்தான். முதல் 10 ஓவர்களிலேயே எதிரணி பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை ஜெயசூர்யா, கலுவிதராணா உடைத்துவிடுவார்கள், விக்கெட் வீழ்வதைப் பற்றி கவலைப்படாமல் எதிரணி பந்துவீச்சாளர்களின் லைன் லென்த்தையும், மனவலிமையையும் குலைக்கும் விதத்தில் பேட் செய்து எளிதாக ரன்களைச் சேர்த்தனர்.


அதேபோன்ற நுட்பத்தைத்தான் கொல்கத்தா அணி இந்த சீசனின் 2-வது சுற்றில் பயன்படுத்தி வருகிறது, அதற்கு வெற்றியும் கிடைத்து வருகிறது. இந்தியாவில் நடந்த முதல் சுற்றில் கொல்கத்தா அணிக்கு கிடைத்த ஒவ்வொரு வெற்றியும் போராட்டத்தில்தான் கிடைத்தது. ஆனால், ஐக்கியஅரபு அமீரக்ததுக்கு வந்தபின் அந்த அணியின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம், எதிரணிக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ், கில், ராணா, திரிபாதி, தினேஷ் கார்த்திக், நரேன், மோர்கன், ரஸல், சஹிப் அல்ஹசன் என வரிசையாக அணியில் பேட்ஸ்மேன்களை வைத்து எதிரணி மிரட்டினார்கள். அவர்களின் இந்த முயற்சிக்கு அடுத்தடுத்து வெற்றி கிடைத்துள்ளது.

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை மிகவும் நெருக்கடியான , அழுத்தம் மிகுந்த போட்டிகளில் அதைக்கடந்து வெற்றி பெறும் போக்கு அணி வீரர்களிடம் இல்லை. ஏதாவது ஒருபோட்டியில் இதுபோன்று அழுத்தத்தை வென்று வெற்றியை ருசித்திருக்கலாம். இதுபோன்ற முக்கியமான தருணங்களில் அழுதத்தையும், நெருக்கடியையும் காலில்போட்டு மிதிப்பது அவசியம்.

உலகக் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிவரும், தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் வைத்திருந்த தென் ஆப்பிரிக்க அணி அழுத்தமான நேரங்களில் நெருக்கடியான ஆட்டங்களில் அதைசமாளிக்க முடியாமல் தோல்வி அடைந்தனர்.

பல உலகக் கோப்பைப் போட்டிகள், ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்தில் சிறப்பாக ஆடி கடைசி ேநரத்தில் கோட்டைவிடுவார்கள். அதனால்தான் அவர்கள் கிரிக்கெட் அரங்கில் சோக்கர்ஸ்(chokers) என்று அழைக்கப்படுகின்றனர். இதை அந்த அணியின் முன்னாள் வீரர் கிறிஸ்டனே வெளிப்படையாக தெரிவித்தார். அதுபோலவே ஆர்சிபி அணியும் சோக்கர்ஸாக மாறிவிட்டது.

ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் நேற்று கொல்கத்தா சுழற்பந்துவீச்சாளர்களை கையாண்ட விதமே தவறானது. எதிரணியின் மனவலிமையை, லைன் லென்த்தை உடைக்க சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தை ஏரில் டாஸ் செய்யும்போதே கிரீஸை விட்டு இறங்கி வந்து சாத்து, சாத்தியிருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதாவது ஒரு ஓவரை டார்கெட் செய்திருந்தால், அடுத்த பந்தை எவ்வாறு வீசுவது, லைன் லென்த்தில் வீச முடியாமல் கொல்கத்தா சுழற்பந்துவீச்சார்கள் குழப்பம் அடைந்திருப்பார்கள். பந்துவீச்சாளர்கள் மீது அழுத்ததை ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் திணித்திருக்கலாம்.

ஆனால், கிரீஸுக்குள் நின்றுகொண்ட ஷார்ஜா போன்ற ஆடுகளத்தில் மெதுவாக வரும் பந்துகளை அடிக்க ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் முயன்றது பெரும் தவறாகும். இரு பந்துகள் பேட்ஸமேனின் பேட்டில் பட்டு சிக்ஸர், பவுண்டரி செல்லும் ஆனால், 3-வது ஷாட் நிச்சயம் மூக்கு மேல் ராஜாவாகிவிடும்.
ஆதலால் ேநற்றைய ஆட்டத்தில் தோல்விக்கு முக்கியக் காரணம் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் மட்டும்தான். குறிப்பாக ஏபிடி இந்தியாவில் நடந்த முதல்சுற்றில் சிறப்பாக ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் ஃபார்மில்லாமல் தவித்தார்.

2-வது சுற்றில் ஏபிடி 150 ரன்கள்கூட எட்டவி்ல்லை. அடுத்த சீசனில் ஐபிஎல் தொடரில் ஏபிடி ஆடுவாரா, அல்லது ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் முழுக்குபோடுவாரா என்பது விரைவில் தெரியவரும்.
விராட் கோலி, மேக்ஸ்வெல், பரத், ஏபிடி ஆகிய 4 பேரும் நேற்று பேட்டிங்கில் சொதப்பியது தோல்வியை எளிதாக ஒப்புக்கொள்ள வைத்தது. 138 ரன்களை வைத்துக்கொண்டு அதிரடி பேட்ஸ்மேன்களை வைத்திருக்கும் கொல்கத்தா அணியை வீழ்த்த முயல்வது கடினமானது.

ஆர்சிபிஅணியில் கோலி அடித்த 39 ரன்கள்தான் அதிகபட்சம். மற்ற வீரர்களான படிக்கல்(21), பரத்(9), மேக்ஸ்வெல்(15), ஏபிடி(11)ஷாபாஸ்(13), கிறிஸ்டியன்(9) ரன்கள் சேர்த்தனர். 88 ரன்களுக்கு2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆர்சிபி அணி அடுத்த 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக கடைசி 34 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி அணி.

139 ரன்கள் சேர்த்தால் ெவற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ்(26), கில்(29) நல்ல தொடக்கம் அளித்தனர். இதை ரன் வேகத்தைஅடுத்தடுத்து வந்த பேட்ஸமேன்கள் பயன்படுத்தி இருந்தால் ஆட்டம் 15 ஓவர்களில் முடிந்திருக்கும்.

திரிபாதி 6 ரன்னில் ஏமாற்றினார். “பிஞ்ச் ஹிட்டர்” நரேன், ராணா இருவரும் ஆட்டத்தின் போக்கை திசை திருப்பினர். அதிலும் கிறிஸ்டியன் ஓவரில் நரேன் அடித்த 3 சிக்ஸர்கள் உள்ளிட்ட 22 ரன்கள் ஆட்டத்தின் வெற்றியை கொல்கத்தாவுக்கு வாரிக் கொடுத்தது.

அதன்பின் ஆட்டத்தை தங்கள் போக்கில் திருப்ப ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் முயன்றும் முடியவில்லை. நரேன்(26), ராணா(23), கார்த்திக்(10) என ஆட்டமிழந்தனர். சஹிப் அல்ஹசன், மோர்கன்கூட்டணி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கிறிஸ்டியன் ஓவரில் சஹிப் அல் ஹசன் ஒரு பவுண்டரி அடித்தபோதே ஆட்டம் முடிந்துவிட்டது, அடுத்த 3 ரன்களை எளிதாக எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து வந்தனர்.

ஆர்சிபி அணியில்ஆ றுதல் அளிக்கக்கூடியது ஹர்சல் படேல் இந்த சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி கடந்த 2013ம் ஆண்டு பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார். சஹல் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்சல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் சுற்றி்ல் ஃபார்மில் இல்லாத சஹல் 2-வது சுற்றில் ஃபார்முக்குத் திரும்பிவிட்டார். சிராஜ் 4 ஓவர்கள்வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x