

தோனியின் பேட்டிங்கிற்குப் புகழாரம் சூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விராட் கோலி.
ஐபில் போட்டியில் நேற்று (அக்டோபர் 10) நடைபெற்ற ஆட்டத்தில் கேப்டன் தோனியின் மிரட்டலான ஆட்டம், உத்தப்பா, கெய்க்வாட் பேட்டிங் ஆகியவற்றால் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இதனை தோனி விளாசி சென்னை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அவருடைய பேட்டிங் குறித்த விமர்சனம் அனைத்துக்குமே நேற்றைய ஆட்டம் பதிலடியாக இருந்தது. இதனால் சமூக வலைதளத்தில் தோனிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தோனியின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அரசன் திரும்ப வந்துவிட்டார். ஆட்டத்தில் மிகச்சிறந்த ஃபினிஷர். இன்று மீண்டும் ஒருமுறை நான் என்னுடைய இருக்கையில் இருந்து துள்ளிக்குதித்தேன் தோனி".
இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இன்றைய எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி சென்னை அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.