Published : 23 Mar 2016 09:22 AM
Last Updated : 23 Mar 2016 09:22 AM

நியூஸிலாந்து 180 ரன்கள் குவிப்பு

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து-பாகிஸ்தான் அணிகள் நேற்று மொஹாலியில் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்தில், வில்லியம்சன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பவர் பிளேவில் நியூஸிலாந்து விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 62 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன், மொகமது இர்பான் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்தில் 17 ரன் எடுத்தார். அடுத்து வந்த காலின் முன்ரோவை 7 ரன்னில் அப்ரீடி வெளியேற்றினார்.

மார்ட்டின் கப்தில் 33 பந்தில், 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். அவரது அதிரடியால் 12 ஓவர்களில் நியூஸிலாந்து 100 ரன்களை கடந்தது. 48 பந்தில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 80 ரன் விளாசிய நிலையில் மார்ட்டின் கப்தில், முகமது சாமி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 14.3 ஓவரில் 127 ஆக இருந்தது. அடுத்து வந்த கோரே ஆண்டர்சன் 14 பந்தில் 21 ரன் எடுத்து வெளியேறினார். அவரது விக்கெட்டை அப்ரீடி கைப்பற்றினார்.

5-வது விக்கெட்டுக்கு களமிறங் கிய ராங்கி 11 ரன்னில் சாமி பந்தில் நடையை கட்டினார். மொகமது அமீர் வீசிய கடைசி ஓவரில் ராஸ் டெய்லர் தலா 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் சேர்க்க முடிவில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது.

ராஸ் டெய்லர் 36, எலியாட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது சாமி, அப்ரீடி தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 181 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட் செய்ய தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x