

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.
லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த டெல்லி அணி தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறது. எனினும் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றியை தவறவிட்டிருந்தது. அதேவேளையில் 18 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்திருந்த சென்னை அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வியடைந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றை சந்திக்கிறது.
533 ரன்கள் குவித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட், 546 ரன்கள் வேட்டையாடி உள்ள டு பிளெஸ்ஸி கூட்டணி அச்சுறுத்தல் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். இவர்களுடன் மொயின் அலி, அம்பதி ராயுடு ஆகியோரும் பின்கள பேட்டிங்கில் 227 ரன்கள் சேர்த்துள்ள ரவீந்திர ஜடேஜாவும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர் களாக திகழ்கின்றனர்.
அதேவேளையில் 96 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள தோனி, 160 ரன்கள் எடுத்துள்ள சுரேஷ் ரெய்னா ஆகியோரது பேட்டிங் கவலையளிப்பதாக உள்ளது. பந்து வீச்சில் தீபக் ஷகார், ஷர்துல் தாக்குர், டுவைன் பிராவோ சவால் அளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
டெல்லி அணி பேட்டிங்கில் பிரித்வி ஷா 401 ரன்களும், ஷிகர் தவண் 544 ரன்களும் குவித்துள்ளனர். ஆனால் இந்த ஜோடியின் பேட்டிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமையவில்லை. அதேவேளையில் ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் சீராக ரன்கள் சேர்த்து வருகின்றனர். பின்கள வரிசையில் ஷிம்ரன் ஹெட்மயரின் அதிரடி பலம் சேர்ப்பதாக உள்ளது. டெல்லி அணியின் பந்து வீச்சு அசுர பலத்துடன் உள்ளது.