Published : 09 Oct 2021 05:14 PM
Last Updated : 09 Oct 2021 05:14 PM

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுகிறார்? சென்னையில் பிரியாவிடைக்கு வாய்ப்பு

சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி | கோப்புப்படம்

துபாய்

சிஎஸ்கே அணியில் தோனியின் எதிர்காலம் என்ன என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகமாக அலசப்படும் தலைப்பாக இருக்கிறது. ஆனால், கடந்த ஒரு வாரத்துக்குள் இருவிதமான பதில்களை அளித்து ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார் தோனி.

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்குள் இரு அணிகள் புதிதாக வருகின்றன, மெகா ஏலமும் நடத்தப்பட்டுள்ளது. ஆதலால், சிஎஸ்கே அணியில் தோனி தொடர்ந்து வீரராக நீடிப்பாரா அல்லது பயிற்சியாளராக, ஆலோசகராக நீடிப்பாரா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

40 வயதாகும் தோனியால் அணியில் பேட்ஸ்மேனாக இருந்தபோதிலும் அவரால் போதுமான அளவு ரன்களைக் குவிக்க முடியவில்லை. ஆதலால், ஒரு வீரராக அணியில் தொடர்வாரா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய தோனி, "நீங்கள் என்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதைப் பார்க்கலாம். அப்போது நான் சென்னை வருவேன். எனது கடைசி ஆட்டத்தை அங்கே விளையாடுவேன். ரசிகர்கள் எனது கடைசி ஆட்டத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படித்தான் விடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

ஆனால், துபாயில் கடந்த இரு நாட்களுக்கு முன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி டாஸ் போட்டபின் தோனி பேசியது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. அதில் அவர் கூறுகையில், “அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் ஆடையில் பார்க்கலாம். ஆனால், சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என எனக்குத் தெரியாது. அடுத்த சீசனில் புதிதாக இரு அணிகள் வருகின்றன என்பதால், ஏராளமான நிச்சயமற்ற தன்மைகள் சுற்றி இருக்கின்றன. எந்த மாதிரியான தக்கவைப்புக் கொள்கை இருக்கும் என எங்களுக்குத் தெரியாது.

எத்தனை வெளிநாட்டு வீரர்களை, உள்நாட்டு வீரர்களைத் தக்கவைக்கப் போகிறார்கள் என எனக்குத் தெரியாது. ஆதலால் ஏராளமான நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. என்ன நடக்கும் என்பதைப் பொறுமையாகப் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகி பெயர் வெளியிட விரும்பாதவர் கூறுகையில், “சிஎஸ்கே அணியிலிருந்து பிரிக்க முடியாதவர் தோனி. அவருக்குப் பிரியா விடை அளிக்கும்போது, சென்னையில் அவர் களமிறங்க வேண்டும் என்று நிர்வாகம் விரும்புகிறது. ஆதலால், சிஎஸ்கே அணியில் அடுத்த சீசனில் தோனி விளையாடமாட்டார் என நான் நினைக்கவில்லை. சேப்பாக்கத்தில் தோனி தனது கடைசி ஆட்டத்தை விளையாடுவதை ரசிகர்கள் பார்க்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x