

இந்திய நீச்சல் வீராங்கனை ரிது கேடியா தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தி கடலை மார்ச் 30-ம் தேதி நீந்தி கடந்து சாதனை புரிய திட்டமிட்டுள்ளார்
மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டம் ஷர்தா நகரைச் சேர்ந்த கிஷோர் ரத்தன்லால் கேடியா, உமா கிஷோர் கேடியா தம்பதியின் மகள் ரிதுகேடியா (26). நீச்சல் வீராங்கனையான இவர் மாநில, தேசிய போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக் கங்கள், 3 வெண்கலப் பதக்கங் களை வென்றுள்ளார். இவர் தனது 17 வயதில் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் புரியத் தொடங்கினார்.
வரும் 30-ம் அதிகாலை 12.15 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரையிலான 35 கி.மீ. தூர பாக். ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரியத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இவர் இந்தியா மற்றும் இலங்கை அரசுகளிடம் அனுமதி பெற்றுள்ளார். அவர் அதிகாலை தனுஷ்கோடி கடற்கரை வந்தடை யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு வழங்க இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, ராமநாதபுரம் மாவட்ட காவல் நிர்வாகம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோருக்கு ரிதுகேடியா அனுமதிக் கடிதம் அனுப்பி உள்ளார்.
இவர், கடந்த 16.7.2007-ல் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு இடையேயான 22.2 கிலோ மீட்டர் தூர ஜிப்ரால்டர் நீரிணைப்பை 3 மணி 59 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளார். அதே ஆண்டு, ஜூலை 28-ம் தேதி கிரேக்க நாட்டில் கலிதியா முதல் நிகடி வரையிலான டொரோனியஸ் வளைகுடாவை 9 மணி 50 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். அதே ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிக் ஏரியை 26.6 கி.மீ. தூரத்தை 10 மணி 51 நிமிடத்தில் கடந்துள்ளார்.
அதே ஆகஸ்ட் 11-ல் இங்கிலாந்து முதல் பிரான்ஸ் வரையிலான ஆங்கிலக் கால்வாயை (39 கி.மீ.) 15 மணி 50 நிமிடத்தில் தனது 17-வது வயதில் கடந்து சாதனை புரிந்துள்ளார். இதுபோன்ற சாதனை களுக்காக 2007-08-ம் ஆண்டுக்கான மகாராஷ்டிரா அரசின் உயரிய விருதான சிவ சத்ரபதி விருதை பெற்றுள்ளார்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் எம். கில்பர்ட் பெஞ்சமின் ‘தி இந்து’விடம் கூறியதாவது: மகாராஷ்டிராவை சேர்ந்த ரிதுகேடியா, வரும் 30-ம் தேதி தலைமன்னார் - தனுஷ்கோடி பாக். ஜலசந்தி கடலை நீந்திக் கடக்க உள்ளதாக எங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். விளையாட்டுத் துறையின் உதவியையும், தனுஷ் கோடியில் சாதனை நிறைவு விழா நடத்துவதற்கான அனுமதியையும் கோரியுள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள விளை யாட்டுத் துறை செயலாளரின் ஆலோசனைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.