Published : 07 Oct 2021 05:33 PM
Last Updated : 07 Oct 2021 05:33 PM

மஞ்சள் ஜெர்ஸியில் என்னைப் பார்க்கலாம்; ஆனால்? 2022 ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா?- குழப்பத்தில் விட்ட தோனி

சிஎஸ்கே கேப்டன் தோனி | கோப்புப்படம்

துபாய்

எனக்குப் பிரியாவிடை கொடுக்கும் போட்டி சென்னையில் இருக்கும் என்று ரசிர்களுக்கு நம்பிக்கையளித்த சிஎஸ்கே கேப்டன் தோனி, “மஞ்சள் ஆடையில் அடுத்த சீசனில் என்னைப் பார்க்கலாம். ஆனால்” என்று புதிரான பதிலை அளித்துள்ளார்.

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கடந்த இரு நாட்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், " நீங்கள் என்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதைப் பார்க்கலாம். அப்போது நான் சென்னை வருவேன். எனது கடைசி ஆட்டத்தை அங்கே விளையாடுவேன். ரசிகர்கள் எனது கடைசி ஆட்டத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படித்தான் விடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

வயது காரணமாக தோனி நடப்பு 2021 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறக்கூடும் எனவும், அவர் சென்னை அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பொறுப்பை ஏற்கக்கூடும் என ரசிகர்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் துபாயில் இன்று நடந்து வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. டாஸ் போடும் நிகழ்வுக்குப் பின் தோனி அளித்த பேட்டி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில், “அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் ஆடையில் பார்க்கலாம். ஆனால், சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என எனக்குத் தெரியாது. அடுத்த சீசனில் புதிதாக இரு அணிகள் வருகின்றன என்பதால், ஏராளமான நிச்சயமற்ற தன்மைகள் சுற்றி இருக்கின்றன. எந்த மாதிரியான தக்கவைப்புக் கொள்கை இருக்கும் என எங்களுக்குத் தெரியாது.

எத்தனை வெளிநாட்டு வீரர்களை, உள்நாட்டு வீரர்களைத் தக்கவைக்கப் போகிறார்கள் என எனக்குத் தெரியாது. ஒவ்வொரு வீரருக்கான பண அளவுகூட குறையக்கூடும். ஆதலால், ஏராளமான நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. விதிகள் நடைமுறைக்கு வராதவரை, தெரியாதவரை உங்களால் எதையும் முடிவு செய்ய முடியாது. என்ன நடக்கும் என்பதை பொறுமையாகப் பார்க்கலாம். அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என நம்புவோம்''.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

இந்த ஐபிஎல் சீசன் மட்டுமல்லாது கடந்த ஐபிஎல் சீசனிலும் தோனியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. அதிலும் குறிப்பாக துபாயில் சில நாட்களுக்கு முன் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இந்தப் போட்டியில் 27 பந்துகளைச் சந்தித்த தோனி 18 ரன்னில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட தோனி அடிக்கவில்லை. சிறந்த ஃபினிஷர் என்று அறியப்பட்ட தோனியின் பேட்டிங்கைப் பார்த்தபோது அவர்களின் ரசிகர்களே வெறுப்படையும் அளவுக்கு இருந்தது.

தோனி பேட்டிங் பயிற்சி எடுக்கவில்லையா அல்லது பேட்டிங் மறந்துவிட்டதா எனத் தெரியவில்லை. அவரின் பேட்டிங் முறை, ஸ்டைல் அனைத்தும் பழைய தோனி இல்லை என்பதையே கூறியது.

அதுமட்டுமல்லாமல் நேற்று டெல்லி பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சிலும் ரன் சேர்க்க தோனி திணறினார். சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், அஸ்வினின் 16 பந்துகளைச் சந்தித்த தோனி அதில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். சரி வேகப்பந்துவீச்சை விளாசுவார் என எதிர்பார்த்தபோது, வேகப்பந்துவீச்சாளர்கள் ரபாடா, நோர்க்கியா, ஆவேஷ் கான் என 3 பேரின் பந்துவீச்சில் 11 பந்துகளைச் சந்தித்த தோனி 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்தப் போட்டியில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 66 ஆகக் குறைந்துவிட்டது. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலும் 136 என இருந்த தோனியின் ஸ்ட்ரைக் ரேட் கடந்த 3 சீசன்களாக 96 ஆகக் குறைந்துவிட்டது. இந்த சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 96 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் அதிகபட்சமே 18 ரன்கள்தான். தோனிக்கு விளையாட எங்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் 7-வது 8-வது வீரராகத்தானே களமிறங்கினார் என்று சப்பைக் கட்டு கட்டலாம். ஆனால், கடந்த போட்டியில் ஜடேஜாவுக்கு முன் களமிறங்கி ஏதும் செய்யவில்லை.

கடந்த 2020-ம் ஆண்டு சீசனில், 14 போட்டிகளில் விளையாடிய தோனி 200 ரன்கள் சேரத்தார். இதில் ஒரு அரை சதம் கூட இல்லை. அதிகபட்சமாக 47 ரன்கள் சேர்த்தார். ஏறக்குறைய ஐபிஎல் டி20 தொடரில் 28 இன்னிங்ஸ்களாக தோனி இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் தோனி, தான் நகர்ந்துகொண்டு அடுத்துவரும் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்குவதே சிறந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x