Published : 07 Oct 2021 05:00 PM
Last Updated : 07 Oct 2021 05:00 PM

எங்களுக்கு இது சாதாரண சாதனை அல்ல: உம்ரான் மாலிக்கின் தந்தை உருக்கம்

உம்ரான் மாலிக் | படம் உதவி: ட்விட்டர்

ஜம்மு

எங்களைப் போன்ற சாதாரணக் குடும்பத்தினருக்கு எங்கள் மகன் ஐபிஎல் தொடரில் விளையாடுவது என்பது சாதாரண சாதனை அல்ல என்று உம்ரான் மாலிக்கின் தந்தை அப்துல் மாலிக் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 தொடர், வெளியிலிருந்து பார்க்கும்போது கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு விளையாட்டாக, 3 மணி நேரம் ஓடும் திரைப்படம் போன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக, திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம் போன்றுகூட சிலருக்குத் தெரியலாம். இங்குள்ள 8 அணிகளின் நிர்வாகிகளும் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள், பெரும் தொழிலதிபர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தைப் பெருக்கிக் கொள்ளும் விளையாட்டாக ஐபிஎல் தொடரை வளர்க்கிறார்கள் என்று பேசலாம்.

ஆனால், யாஹஸ்வி ஜெய்ஸ்வால், தமிழகத்தின் நடராஜன், ஹைதராபாத் முகமது சிராஜ், ஜம்மு காஷ்மீரின் உம்ரான் மாலிக் போன்ற எண்ணற்ற ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து வந்த வீரர்களுக்கு வாய்ப்புக் கதவைத் திறந்துவிட்டது ஐபிஎல் தொடர்தான். பல இளைஞர்கள் திறமையுடன் இருந்தும் இந்திய அணியில் நுழைவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் தவித்த நிலையில் அவர்கள் கைவைத்து ஊன்றி எழுவதற்குத் தளமாக ஐபிஎல் இன்று இருந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டு சீசன் முடிவிலும் புதிய திறமையான இளம் வீரர்கள் இந்திய அணிக்கு அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதில் எத்தனை பேர் வாய்ப்பு பெறுகிறார்கள், பெறப் போகிறார்கள் என்பது தெரியாது, ஆனால், நிச்சயம் ஒருநாள் இந்திய அணிக்குள் செல்வோம் என்ற நம்பிக்கை விதையை ஐபிஎல் தொடர் விதைத்துள்ளது.

அந்த வகையில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள விதைதான் உம்ரான் மாலிக்.

ஜம்முவின் குஜ்ஜார் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் உம்ரான் மாலிக். உம்ரான் மாலிக்கின் தந்தை அப்துல் மாலிக் சிறிய அளவில் காய்கறி, பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

சன்ரைசர்ஸ் அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்றவர் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேரந்த உம்ரான் மாலிக். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த இர்பான் பதானின் வளர்ப்பில், பட்டை தீட்டுதலில் உம்ரான் மாலிக் உருவானவர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் நடராஜன் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து, அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதல் ஆட்டத்திலேயே உம்ரான் மாலிக் 152.95 கி.மீ. வேகத்தில் பந்துவீசி கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களைத் திணறவிட்டார். ஐபிஎல் வரலாற்றிலேயே 3-வது அதிகபட்ச வேகப்பந்துவீச்சாக உம்ரான் மாலிக் பந்துவீச்சு அமைந்தது. ஆர்சிபி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் 151 கி.மீ. வேகத்தில் வீசிய உம்ரான் மாலிக் லைன் லென்த் தவறாமல் வீசி ஆர்சிபி பேட்ஸ்மேன்களைத் திணறவிட்டார். பலமுறை பேட்ஸ்மேன்களை பீட்டன் செய்து பந்து சென்றது. 4 ஓவர்கள் வீசிய உம்ரான் 21 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

தனது மகனின் பெயர் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அப்துல் மாலிக் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''எங்களைப் போன்ற சாதரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, எங்கள் மகன் ஐபிஎல் தொடரில் விளையாடுவது என்பது சாதாரண சாதனை அல்ல. நாங்கள் மிகவும் ஏழைகள். காய்கறி, பழங்களை விற்றுதான் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய மகன் எங்களைப் பெருமைப்படுத்திவிட்டார். எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஆளுநர்கூட எங்கள் மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து என் மகன் சிறப்பாக விளையாட அல்லாவிடம் பிரார்த்திப்பேன்.

என் மகன் 3 வயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது ஆர்வமாக இருந்துவருகிறார். சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக வேண்டுமென்பதே என் மகனின் கனவாக இருந்தது. சன்ரைசர்ஸ் அணியில் ப்ளேயிங் லெவனில் என் மகன் இடம் பெற்றபோது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். என் மகனைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. என் மகன் கடுமையாக உழைத்து இந்த இடத்துக்கு வந்தான். அவருக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு. இந்திய அணிக்காக அவர் விளையாடுவார் என நம்புகிறேன்''.

இவ்வாறு அப்துல் மாலிக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x