

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் காயம் காரணமாக விலகியதையடுத்து, அவருக்குப் பதிலாக மே.இ.தீவுகள் வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
மே.இ.தீவுகள் அணியைச் சேர்ந்த சர்வதேச போட்டிகளில் அனுபம் இல்லாத டோமினிக் டிரேக் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு முதல்தரப் போட்டி, 25 ஏ தரப்போட்டிகள், 19 டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற அனுபவம் உடையவர் டோமினிக் ட்ரேக். இடது கை பேட்ஸ்மேனான டிரேக் இடதுகை மிதவேகப்பந்துவீச்சாளர். டி20 போட்டிகளில் 158 ஸ்ட்ரேக் ரைட் வைத்துள்ளதால் டோமினிக் ட்ரேக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துபாயில் இன்று நடக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி களமிறங்குகிறது. இந்த ஆட்டத்தில் டோமினிக் ட்ரேக் களமிறங்கலாம் எனத் தெரிகிறது.
சிஎஸ்கே அணி தற்போது 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இன்று நடக்கும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்று நல்ல ரன்ரேட் பெற்றால், முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. அதேசமயம், டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த சாம் கரன் முதுகு வலி காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்தும், டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் விலகுவதாக திடீரென அறிவித்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணியில் அவருக்குப் பதிலாக அவரின் சகோதரர் டாம் கரன் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.