Published : 06 Oct 2021 09:17 AM
Last Updated : 06 Oct 2021 09:17 AM

டி20 போட்டியில் ஒரே இந்திய வீரர்: ரோஹித் சர்மா புதிய மைல்கல்

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா | கோப்புப்படம்

ஷார்ஜா

சர்வதேச மற்றும் லீக் உள்ளிட்ட டி20 போட்டிகளில் 400 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் அடித்தபோது இந்த மைல்கல்லை எட்டினார். துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 51-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் சேர்த்தது. 91 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்ளிட்ட 22 ரன்கள் சேர்த்தபோது டி20 போட்டியில் முக்கிய மைல்கல்லை எட்டினார். டி20 போட்டிகளில் 400 சிக்ஸர்களை எட்டிய முதல் இந்திய பேட்ஸ்மேன் எனும் சிறப்பை ரோஹித் சர்மா பெற்றார்.

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை 212 போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 227 சிக்ஸர்கள் அடித்துள்ளார். பவுண்டரிகளைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் 500 பவுண்டரிகளை எட்ட இன்னும் 12 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க வேண்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் அதிகமான ரன்கள் குவித்த வீரர்களில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவணுக்கு அடுத்தார்போல் 3-வது இடத்தில் ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த வகையில் கிறிஸ் கெயில்357 சிக்ஸர்களும், டிவில்லியர்ஸ்249 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். 3-வது இடத்தில் ரோஹித் சர்மா 227 சிக்ஸர்களுடன் உள்ளார்.

டி20 போட்டிகளில் அதிகமான சிக்ஸர்களை அடித்த வீரர்களில் ேம.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். கிறிஸ் கெயில் 1,042 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். மே.இ.தீவுகள் வீரர் கெய்ரன் பொலார்ட் 758 சிக்ஸர்களும், ஆன்ட்ரூ ரஸல் 510 சிக்ஸர்களும் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்து முன்னாள் வீரர் பிரன்டெம் மெக்கலம் 485 சிக்ஸர்களும், ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வாட்ஸன் 467 சிக்ஸர்களும் அடித்து முறையே 4-வது 5-வது இடத்தில் உள்ளனர். ஆர்சிபி வீரர் டிவில்லியர்ஸ் 434 சிக்ஸர்களும், ரோஹித் சர்மா 400 சிக்ஸர்களும் அடித்து முறையே 6-வது 7-வது இடத்தில் உள்ளனர்.

இந்திய அளவில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா 336 சிக்ஸர்களும், கேப்டன் விராட் கோலி 316 சிக்ஸர்களும், தோனி 304 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x