Last Updated : 06 Oct, 2021 06:59 AM

 

Published : 06 Oct 2021 06:59 AM
Last Updated : 06 Oct 2021 06:59 AM

மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் செல்ல உதவிய ராஜஸ்தான்; இஷான் காட்டடி: நைல், நீஷம் விக்கெட் மழை

அதிரடியாக ஆடி அரை சதம் அடித்த மும்பை வீரர் இஷான் கிஷன் | படம் உதவி: ட்விட்டர்.

ஷார்ஜா

ஜேம்ஸ் நீஷம், நேத்தன் கூல்டர் நைல், பும்ரா ஆகியோரின் பந்துவீச்சு, இஷான் கிஷனின் காட்டடி ஆட்டம் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 51-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் சேர்த்தது. 91 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றிலேயே ராஜஸ்தான் அணி சேர்த்த 90 ரன்கள் என்பது 2-வது குறைந்த ஸ்கோராகும்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே-ஆஃப் கனவு கலையாமல் உயிர்ப்பித்துள்ளது. இதுவரை 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. 4-வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் நிகர ரன் ரேட் அடிப்படையில் இருக்கிறது.

நாளை நடக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது முடிவாகும். ஒருவேளை ராஜஸ்தான் அணி, கொல்கத்தாவை வீழ்த்திவிட்டால், நாளை மறுநாள் நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தினாலே மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும்.

நாளை நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெல்லும்பட்சத்தில் 14 புள்ளிகளுடன் நிகர ரன் ரேட்டில் முன்னணியில் இருக்கும். கொல்கத்தா அணியின் ரன் ரேட் அடிப்படையில், மும்பை இந்தியன்ஸ் அணி, தனது கடைசி லீக் ஆட்டமான சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எத்தனை ஓவர்களில் அந்த அணியைச் சுருட்ட வேண்டும், எத்தனை ஓவர்களுக்குள் சேஸிங் செய்தால் கொல்கத்தா அணியைவிட ரன் ரேட் அதிகம் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும் என்பது முடிவாகும்.

ஆக மொத்தம், மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கான அனைத்து வழிகளும் திட்டமிட்டு வகுக்கப்பட்டுள்ளன. இந்த நாடகம் நல்லபடியாக முடியும்பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லும். இல்லாவிட்டால் ஒரு மாற்றம் ஏற்பட்டால் கொல்கத்தா அணி செல்லும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி செத்த பாம்பாகிவிட்டது. அதை மறுபடியும் அடிப்பது என்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பெரிய சவாலாக இருக்காது. செத்த பாம்பை அடித்துதான் ப்ளே ஆஃப் வர வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ப அபுதாபியில் நடக்கும் போட்டி என்பதால், பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும். முதலில் பேட் செய்தாலும் பெரிய ஸ்கோரை மும்பை எட்டும் அல்லது சேஸிங் செய்தாலும் குறைந்த பந்தில் சேஸிங் செய்து ரன் ரேட்டை உயர்த்தி கொல்கத்தாவைப் பின்னுக்குத் தள்ளி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு உள்ளது. இவையெல்லாம் மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வருவதற்கான பாதையாக இருக்கலாம் (உஷ்! கண்டுக்காதீங்க தருணம்)

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பும்ரா, நேத்தன் கூல்டர் நைல், ஜேம்ஸ் நீஷம் ஆகியோரின் பந்துவீச்சுதான். மூவரும் சேர்ந்து ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையைத் தகர்த்துவிட்டனர்.

25 பந்துகளில் அரை சதம் அடித்து இஷன் கிஷன் ஃபார்முக்குத் திரும்பியது மகிழ்ச்சி. டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள இஷான் கிஷன் பேட்டிங் கேள்வியாக இருந்த நிலையில், இழந்த நம்பிக்கையை மீட்டுள்ளார். ஆனால், சூர்யகுமார் யாதவ் இதுவரை ஒரு போட்டியில்கூட சிறப்பாக ஆடவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் 16 டாட் பந்துகளுடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய கூல்டர் நைல் ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் போட்டியில் அறிமுகமான ஜேம்ஸ் நீஷம் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 13 டாட் பந்துகளுடன் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 18 டாட் பந்துகளுடன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த மூவரும் சேர்ந்து ராஜஸ்தான் கதையை முடித்துவிட்டனர்.

ஷார்ஜா ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத மெதுவான ஆடுகளம். பேட்ஸ்மேனின் முழங்காலுக்கு மேல் பந்து பவுன்ஸ் ஆவது கடினமாக இருந்தது. இதைச் சரியாகப் பயன்படுத்திய மிதவேகப்பந்துவீச்சாளர் நீஷம் மெதுவாகவே பந்துவீசி, ஸ்விங் செய்தார். ஏற்கெனவே ஷாட்களை அடிக்க முடியாமல் திணறிய ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் மெதுவாக, நின்று பேட்டை நோக்கி வரும் பந்தைக் கணிக்க முடியாமல் அடித்து ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்தனர். சஞ்சு சாம்ஸன், ஷவம் துபே, ராகுல் திவேட்டியா ஆகிய 3 பேரின் விக்கெட்டுகளையும் நீஷம் வீழ்த்தினார்.

ஆனால், கூல்டர் நைல் தனது பந்துவீச்சில் வேகத்தைக் குறைக்காமல் தொடர்ந்து 140 கி.மீ வேகத்திலேயே பந்து வீசினார். ஆடுகளத்தில் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகவில்லை, ஸ்விங் ஆகவில்லை. ஆனால், பேட்ஸ்மேனை நோக்கி வரும் வேகம் குறைவாக இருந்தது விக்கெட் விழக் காரணமாக அமைந்தது. பேட்ஸ்மேன்கள் சற்று நிதானமாக இருந்து கணித்து ஆடினால் ஷாட்கள் நினைத்தது போன்று கிடைத்திருக்கும்.

91 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ரோஹித், இஷான் கிஷன் களமிறங்கினர். குறைந்த ஸ்கோரை விரைவாக சேஸிங் செய்து ரன் ரேட்டைத் தக்கவைக்கும் முயற்சியில் இருந்தனர் என்பது பேட்டிங்கில் தெரிந்தது.

முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா சிக்ஸர், பவுண்டரியுடன் சேஸிங்கைத் தொடங்கினார். ஸ்ரேயாஸ் கோபால் வீசிய 3-வது ஓவரிலும் ரோஹித் சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரோஹித் சர்மாவை ஸ்டெம்பிங் செய்யும் வாய்ப்பை சஞ்சு சாம்ஸன் தவறவிட்டார்.

சக்காரியா வீசிய 4-வது ஓவரில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சூர்யகுமார் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கினார். குல்தீப் யாதவ் வீசிய 5-வது ஓவரில் இஷான் கிஷன் 3 பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

முஸ்தபிசுர் வீசிய 6-வது ஓவரில் லாம்ரோரிடம் கேட்ச் கொடுத்து சூர்யகுமார் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர் ப்ளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 56 ரன்கள் சேர்த்தது. எட்ட வேண்டிய இலக்கில் பாதிக்கு மேல் பவர் ப்ளேவில் எட்டிவிட்டனர். அதன்பின் ஹர்திக் பாண்டியா பொறுமை காக்க இஷான் கிஷன் அடித்து நொறுக்கினார்.

சக்காரியா வீசிய 8-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 24 ரன்களை விளாசினார் இஷான் கிஷன். வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 9-வது ஓவரை வீசிய முஸ்தபிசுர் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடிக்க மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இஷான் கிஷன் 25 பந்துகளில் 50 ரன்கள் (3 சிக்ஸர், 5 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 25 பந்துகளில் அரை சதம் என்பதைவிட 15 பந்துகளைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும். இஷான் கிஷன் 10 டாட் பந்துகளை சந்தித்தார் என்பதால் 15 பந்துகளில் அரை சதம்தான். ஹர்திக் பாண்டியா 5 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டுமே மோசமாக இருந்தது. ராஜஸ்தான் அணியால் நிச்சயமாக எதிரணிக்கு சவால் அளிக்க முடியும். அதற்குரிய வீரர்கள் இருந்தபோதிலும் நேற்று மோசமாக ஆடியது ஏன் எனத் தெரியவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரன் ரேட் கிடைக்க வேண்டும், குறைந்த ஓவரில் சேஸிங் செய்யும் விதத்தில் குறைவான ஸ்கோர் ராஜஸ்தான் அணி சேர்த்தது போன்றவை ‘உஷ்! கண்டுக்காதீங்க’ தருணத்தை நினைவுபடுத்துகிறது.

மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் செல்ல ராஜஸ்தான் அணியின் பங்கும் சிறிது வேண்டுமே….

ஒருபோட்டியில் உச்சகட்ட ஃபார்மில் அனைவரும் விளையாடுகிறார்கள், மற்றொரு போட்டியில் எந்த வீரரும் ஒழுங்காக ஆடுவதில்லை. இதுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிலைமை. இந்த சீசன் முழுவதுமே ராஜஸ்தான் அணிக்கு செட்டில் ஆன பேட்ஸ்மேன் என்ற ரீதியில் கேப்டன் சாம்ஸனைத் தவிர யாருமே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் வீரர்களை மாற்றிக்கொண்டு, எந்த வீரருக்கும் நிலையில்லாத வாய்ப்பு என்ற மனநிலையைக் கொண்டுவந்தது சிறப்பாக விளையாட முடியாததற்குக் காரணமாகும்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல தொடக்கத்தை அளித்த ஜெய்ஸ்வால், லூயிஸ் கூட்டணி நல்ல தொடக்கத்தை அளிக்க முயன்றனர். ஆனால், தவறான ஷாட்களால் விக்கெட்டை இழந்தனர். லூயிஸ் 24 ரன்னில் பும்ரா பந்துவீச்சிலும், ஜெய்ஸ்வால் 12 ரன்னில் கூல்டர் நைல் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் சாம்ஸன் மீது அனைத்து அழுத்தங்களும் இறங்கின. நீஷம் பந்துவீச்சில் 3 ரன்கள் சேர்த்த நிலையில் சாம்ஸன் ஆட்டமிழந்தார்.அதன்பின் வந்த துபே (3), பிலிப்ஸ் (4) என விரைவாக வெளிேயறினர். கடந்த போட்டியில் காட்டடி அடித்த துபே இந்த ஆட்டத்தில் ஊசிப்பட்டாசாகிவிட்டார்.

மில்லர் (15), திவேட்டியா (12) இருவரும் நிலைத்து ஆட முயன்றும் முடியவில்லை. கடைசி வரிசை வீரர்களும் நம்பிக்கையற்று பேட் செய்து விக்கெட்டை இழந்தனர். முஸ்தபிசுர் ரஹ்மான் 8 ரன்னிலும், குல்தீப் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x