உலகக் கோப்பை கால்பந்து - ஆப் சைடு தகவல்கள்

உலகக் கோப்பை கால்பந்து - ஆப் சைடு தகவல்கள்
Updated on
1 min read

மிராக்கிள் மேன்

உருகுவே வீரர்கள் தங்கள் அணியின் பிசியோதெரபிஸ்ட் வால்டர் ஃபெரைராவை 'மிராக்கிள் மேன்' (அதிசய மனிதன்) என்றழைக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு கோல் அடித்து உருகுவேக்கு வெற்றி தேடித்தந்த லூயிஸ் சுரேஜ், கடந்த மாதம் முழங்கால் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் விரைவாக காயத்திலிருந்து மீள்வதற்கு வால்டர்தான் காரணமாம். அதனால்தான் சுரேஜ் கோலடித்தவுடன் வால்டரைக் கட்டித் தழுவியதோடு, ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி சைகை காண்பித்து வால்டரின் முக்கியத்துவத்தை பாராட்டும்படி கூறியிருக்கிறார்.

கோல் மரங்கள்

சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் வகையில் சல்வடார் மைதானத்தில் அடிக்கப்படும் ஒவ்வொரு கோலுக்கும் 1,111 மரங்கள் நடப்படும் என மைதானம் அமைந்துள்ள பாஹியா மாநில அரசு அறிவித்துள்ளது. இதுவரை 17 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதன்படி 18,887 மரங்கள் நடப்படுவது உறுதியாகியுள்ளது.

ரொனால்டோவும் பின்னடைவும்

போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உடற்தகுதி குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. முதல் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் படுதோல்வி கண்ட போர்ச்சுகல், நாளை காலை நடைபெறும் ஆட்டத்தில் அமெரிக்காவை தோற்கடித்தால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும். இந்த நிலையில் ரொனால்டோவின் உடற்தகுதி பிரச்சினை அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீரும் உத்தரவும்

உலகக் கோப்பை போட்டியின்போது வெப்பநிலை 89.6 பாரன்ஹீட் அளவை எட்டினால் 30 நிமிட ஆட்டம் முடிந்தவுடன் வீரர்கள் தண்ணீர் குடிப்பதற்காக இடைவேளை விட வேண்டும். முதல் பாதி, 2-வது பாதி என இரு வேளைகளிலும் இந்த இடைவேளை இருக்க வேண்டும் என பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம்பிக்'கை'

பிரேசிலைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 4 தலைமுறையைச் சேர்ந்த 14 பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் 14 பேருக்கும் இரு கைகளிலும் தலா 6 விரல்கள் உள்ளன. அவர்கள் 6-வது முறையாக பிரேசில் உலகக் கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

'வித் அவுட்' ரசிகர்கள்!

ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்காணா மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற இரு போட்டிகளின்போதும் பல ரசிகர்கள் டிக்கெட் வாங்காமல் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து அங்கு வலுவான தடுப்புகளும், 3,100 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in