Published : 27 Mar 2016 09:59 AM
Last Updated : 27 Mar 2016 09:59 AM

அரையிறுதிக்கு முன்னேறுவது யார்? - இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

டி 20 உலகக் கோப்பையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும்.

டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என பலரால் கணிக்கப் பட்ட தோனி தலைமையிலான இந்திய அணி போட்டியை நடத்தும் நாடாக இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் செயல்படவில்லை. 3 ஆட்டத்தில் இரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலிய அணி டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆட்டத் துக்கு ஆட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் கடைசி கட்டத்தில் கோட்டைவிட்ட நிலையில் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பதிவு செய்துள்ளது ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.

மொஹாலி ஆடுகளம் மந்தமாக செயல்படக்கூடியது என்பதால் ரன் குவிப்பதில் எந்த சிரமமும் இருக்காது.

ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஜோடி மீண்டும் பார்முக்கு திரும்ப இன்றைய ஆட்டம் உதவக்கூடும். நல்ல பார்மில் உள்ள நட்சத்திர வீரரான விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத் தில் 30 ரன்கள் சேர்த்ததன் மூலம் ரெய்னாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

யுவராஜ்சிங்கிடம் இருந்து இன்னும் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படாத நிலையில் இன்று தனது சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்த முயற் சிக்கக்கூடும். பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா நல்ல பார்மில் உள்ளனர்.

இளம் வீரர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகி யோர் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நெருக்கடியை சரியாக கையாண்டு வெற்றிக்கு உதவினர். அனுபவ வீரரான ஆஷிஸ் நெஹ்ரா பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசுவது பலமாக உள்ளது.

மொஹாலி ஆடுகளத்தில் பந்து அதிகளவில் சுழலாது என்றாலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் வித்தியாசமான யுக்திகளை கையாளக்கூடும். அதேவேளை யில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பாவும் கடந்த இரு ஆட்டங்களில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களிடம் திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஸம்பாவை கூடுதல் கவனத்துடன் எதிர்கொள் ளக்கூடும். இந்திய அணி பீல்டிங்கிலும் முன்னேற்றம் காண வேண்டியதுள்ளது.

வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா, பாண்டியா, அஸ்வின் ஆகியோர் கேட்ச்களை தவறவிட்டனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் பீல்டிங்கிலும் இந்திய வீரர்கள் அதிக கவனம் செலுத்த முயல்வார்கள்.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ் தானுக்கு எதிரான ஆட்டத்தில் 192 ரன்கள் குவித்து மிரட்டியது. தொடக்க வீரரான உஸ்மான் ஹவாஜா நல்ல பார்மில் உள்ளார். அதிரடியாக விளையாடக்கூடிய ஸ்மித், வாட்சன், வார்னர், மேக்ஸ் வெல், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்கள்.

மொஹாலி மைதானத்தில் ஏற்கெனவே அவர்கள் விளையாடி உள்ளதால் மைதானத்தின் தன் மையை அவர்கள் அறிந்திருப்பது கூடுதல் பலம் தான். இந்த தொடரில் வார்னர் 4வது வீரராக களமிறங் குவது எந்த பலனுமில்லாமல் இருப் பதால் அவரது பேட்டிங் வரிசை மாறக்கூடும். இரு அணிகளுக் குமே இன்றைய ஆட்டம் காலிறுதி போன்றது என்பதால் வெற்றி பெற கடும் போட்டி நிலவும்.

நேரம்: இரவு 7.30
இடம்: மொஹாலி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

விராட் கோலி:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் காலிறுதிக்குச் சமமானது. எங்களது திறமைக்கு ஏற்ப நாங்கள் விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவை நிச்சயம் வீழ்த்த முடியும்.

அணியின் பலத்துக்கு தகுந்தபடி தான் திட்டமிடவேண்டும். போட்டி நடைபெறும் தினத்தில், அதிக அளவிலான முன்கூட்டிய திட்டமிடல் உதவாது. மேலும் இந்த தொடரில் தகவமைத்துக்கொள்ளுதலும் முக்கியமானது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் முக்கியமான வீரர். அவர் அந்த அணிக்கு அடித்தளமாக விளங்குகிறார். அவர் போன்ற பெரிய வீரர்களை விரைவில் வீழ்த்துவது அவசியம்.

ஷேன் வாட்சன்:

இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்திவிட்டால் அது ஒரு பெரிய சாதனையே. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இதுவரை சரியாக ஆடவில்லை. ஆனால் சூழ்நிலைகள் மற்ற அணிகளுக்கும் கடினமாகவே உள்ளது. இந்திய அணியில் திறமை மிக்க மட்டையாளர்களும், பந்து வீச்சாளர்களும் உள்ளனர். திடீரென அவர்களுக்கு ஆட்டம் சிறப்பாக அமைந்துவிட்டால் இந்திய அணியை யாராலும் வீழ்த்த முடியாது.

கோலியை விரைவில் ஆட்டமிழக்க செய்ய வேண்டும், களத்தில் அவர் நிலைத்து நின்றுவிட்டால் பந்து வீச்சாளர்களுக்கு அவர் நெருக்கடி கொடுப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x