

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஷேன் வாட்சன் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஷேன் வாட்சன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெறவில்லை.
மார்ச் 24, 2002-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வாட்சன் தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆடும்போது அவருக்கு வயது 20, அப்போது டி20 கிரிக்கெட் அறிமுகமாகவில்லை.
தற்போது 34 வயதில், சரியாக 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு அவர் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
“தரம்சலாவில் அழகான இயற்கைக் காட்சியின் முன் கண் விழித்தேன். அப்போது எனக்கு என்ன தோன்றியது என்பது சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று நினைத்தேன்.
ஆஸ்திரேலியா அணியில் ஆடிய நாட்கள் இனிமையாக அமைந்தன. நான் கிரிக்கெட்டில் நுழைந்து வளர்ந்த காலத்தில் என்னுடன் விளையாடிய வீரர்களில் ஒருவர் கூட இப்போது என்னுடன் இல்லை. நான் சரியான முடிவை எடுத்துள்ளேன். காயங்களுக்குப் பிறகே எனக்கு சரியாக அமையவில்லை என்பதை உணர்ந்தேன்” என்றார்.
முதல் தர கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஷேன் வாட்சன், இனி ஐபிஎல் உள்ளிட்ட டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
190 ஒருநாள் போட்டிகளில் 5,757 ரன்களை 40.54 என்ற சராசரியில் எடுத்துள்ளார் வாட்சன், 168 விக்கெட்டுகள். மேலும் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோருக்கான சாதனை வாட்சன் வசமே உள்ளது. 2011-ல் டாக்காவில் வங்கதேசத்தை புரட்டி எடுத்த அவர் 185 ரன்களை விளாசினார். டி20 சர்வதேச போட்டிகளில் இதுவரை 56 போட்டிகளில் 1,400 ரன்களை 28 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 46 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து வாட்சன் 10,000 ரன்கள் 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய 7-வது வீரர் ஆவார். ஸ்டீவ் வாஹ், கார்ல் ஹூப்பர், சனத் ஜெயசூரியா, ஜாக் காலிஸ், ஷாகித் அப்ரிடி, மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் மற்றவர்கள் ஆவார்கள். ஆஸ்திரேலிய அணியை அனைத்து வடிவங்களிலும் தலைமை ஏற்று வழிநடத்தியுள்ளார். கடைசியாக இந்தியா 3-0 என்ற டி20 தொடரில் வாட்சன் எடுத்த 124 நாட் அவுட், ஒரு கேப்டன் டி20 கிரிக்கெட்டில் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோராகும்.
3 உலகக்கோப்பைகளில் ஆடியுள்ளார். 2007 மற்றும் 2015-ல் ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனபோது இவர் அந்த அணிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. 2006 மற்றும் 2009 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடர் இறுதிப் போட்டிகளில் வாட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 2009 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு 136 ரன்களையும் இறுதியில் நியூஸி.க்கு எதிராக ஒரு 105 நாட் அவுட் சதங்களையும் அடித்தது அவரது ஒருநாள் கிரிக்கெட் கால உச்சங்களாகும்.
2012 டி20 உலகக்கோப்பை இலங்கையில் நடைபெற்ற போது வாட்சன் 249 ரன்களை 49.80 என்ற சராசரியுடன் எடுத்து அதிக ரன்களுக்கான தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இதே தொடரில் 11 விக்கெட்டுகளைச் சாய்த்து 2-வது இடம் பிடித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் இன்னும் மீதமுள்ள டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல வாட்சனின் பங்கு இம்முறை வரும் போட்டிகளில் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.