

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை ஆஸ்திரேலியா எளிதில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் புள்ளி விவரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
வங்கதேசம் முதலில் பேட் செய்து 156 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 18.3 ஓவர்களில் 157/7 என்று வெற்றி பெற்றது. பேட்டிங்கில் கலக்கிய ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சிலும் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ச்சியாக 10 டி20 போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிராக எந்த அணியின் தொடக்க வீரர்களும் ஜோடியாக 50 ரன்களைச் சேர்த்ததில்லை. நேற்று இது முடிவுக்கு வந்தது, வாட்சன், கவாஜா இணைந்து 7.2 ஓவர்களில் 62 ரன்களை முதல் விக்கெட்டுக்காக சேர்த்தனர். இதற்கு முன்னர் வங்கதேசத்துக்கு எதிராக 10 டி20 போட்டிகளில் எதிரணியினரின் தொடக்க ஜோடி ரன் சேர்ப்பு சராசரி வெறும் 12.9 ரன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 45 ரன்கள்தான் இந்த 10 போட்டிகளில் எதிரணியின் தொடக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதில் 6 முறை எதிரணியினர் 10 ரன்களைச் சேர்க்கும் முன்னரே வங்கதேசம் முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா நேற்று 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலிய டி20 வரலாற்றில் ஸ்டீவ் ஸ்மித் (3/20), கிளென் மேக்ஸ்வெல் (3/13) கேமரூன் பாய்ஸ் ஆகியோர் மட்டுமே இதற்கு முன்னர் ஸ்பின் வீச்சாளர்களாக ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளனர்.
வங்கதேச அணி நேற்று ஆஸ்திரேலிய பந்துவீச்சை கடைசி 3 ஓவர்களில் பதம் பார்த்து சேர்த்த 44 ரன்கள் அந்த அணி கடைசி 3 ஓவர்களில் அடித்த அதிகபட்ச ரன்களாகும். இதில் மஹமுதுல்லா மட்டுமே 13 பந்துகளில் 32 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்காக 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைச் சேர்த்த வகையில் ஆஸ்திரேலியாவுக்காக வாட்சன், கவாஜா அமைத்த அரைசதக் கூட்டணி நேற்று 9-வது முறையாகும், மற்ற அணி எதுவும் தொடக்க ஜோடிக்காக 9 முறை அரைசதக்கூட்டணி அமைத்ததில்லை. முதல் விக்கெட்டுக்காக ஆஸ்திரேலிய தொடக்க ஜோடி 4 சதக்கூட்டணியும் 5 முறை 50-99 வரையிலான பார்ட்னர்ஷிப்பையும் நிகழ்த்தியுள்ளது.
வங்கதேச வீரர் மஹமுதுல்லா நேற்றைய ஸ்கோர் உட்பட நம்பர் 6 அல்லது அதற்கும் கீழே இறங்கி கடந்த 5 டி20 போட்டிகளில் 163 ரன்களை எடுத்துள்ளார். இந்த 5 இன்னிங்ஸ்களிலும் அவர் அவுட் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 96 பந்துகளில் 163 ரன்களை இந்த 5 போட்டிகளில் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 169.79!!
டி20 கிரிக்கெட்டில் 4 பேட்ஸ்மென்கள் 6,000 மற்றும் அதற்கும் கூடுதலாக ரன்கள் எடுத்துள்ளனர். நேற்ற் 17 ரன்கள் எடுத்த வார்னர் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். மொத்தமாக கிறிஸ் கெயில், பிராட் ஹாட்ஜ், பிரெண்டன் மெக்கல்லம் இவருக்கு முன்னேயுள்ளனர்.