Published : 01 Oct 2021 05:29 PM
Last Updated : 01 Oct 2021 05:29 PM

ஒவ்வொரு வீரருக்கும் பொறுப்பிருக்கிறது; அஸ்வினைக் கண்டித்து திட்டிய தோனி: வீரேந்திர சேவாக் மனம் திறப்பு

ரவிச்சந்திரன் அஸ்வின் | கோப்புப்படம்

மும்பை

ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் அஸ்வின் இருந்தபோது, எதிரணி வீரரை சென்ட் ஆஃப் செய்ததை தோனி விரும்பாமல் அவரைத் திட்டினார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரில் தற்போது அஸ்வின் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தாலும், கடந்த 2014-ம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இருந்தார். அப்போது, எதிரணி வீரரை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்து அவர் மீது தூசியை ஊதி சென்ட் ஆஃப் செய்ததைப் பார்த்த கேப்டன் தோனி அஸ்வினைக் கண்டித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஸ்வினை தோனி திட்டிய சிம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

சேவாக் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்த காலகட்டம். 2014-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது, சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் நானும், மேக்ஸ்வெலும் பேட் செய்துவந்தோம். அஸ்வின் பந்து வீசினார். அஸ்வின் வீசிய பந்தில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார்.

மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தவுடன் அஸ்வின் தரையிலிருந்து தூசியை எடுத்து ஊதிவிட்டு, அவரை சென்ட் ஆஃப் செய்தார். அஸ்வினின் செயலை நான் விரும்பவில்லை. ஆனால், இதுகுறித்து இதுவரை நான் ஒருபோதும் வெளிப்படையாகப் பேசியதில்லை. பொதுத் தளத்தில் கூறி அஸ்வின் செய்தது கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டுக்குச் சரியானதா அல்லது தவறானதா என்று விவாதித்ததில்லை. அஸ்வின் செயலைப் பார்த்து தோனி கூட அப்போது கோபப்பட்டு, கண்டித்தார்.

ஆதலால் களத்தில் வீரர்களுக்கு இடையே நடக்கும் எந்தச் சம்பவத்தையும் அதை அங்கேயே விட்டுவிட வேண்டும். அந்தச் சம்பவத்தை எந்த வீரரும் சமூக வலைதளத்தில் பகிர்வதோ அல்லது ஊடகத்தில் பகிர்வதோ கூடாது.

அஸ்வினைப் பொறுத்தவரை களத்தில் நடந்ததைக் கூறுவது அவரின் விருப்பம். ஆனால், போட்டி முடிந்தபின் களத்தில் என்ன நடந்தது என்பது குறித்த சம்பவங்கள் குறித்து எந்த வீரர் சமூக ஊடகங்களில் அல்லது ஊடகத்தில் பேசினாலும் அது மிகப்பெரிய விவகாரமாகும். களத்தில் என்ன நடந்தாலும், அதை வெளியே கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. இது ஒவ்வொரு வீரரின் பொறுப்பாகும்''.

இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x