Published : 01 Oct 2021 05:10 PM
Last Updated : 01 Oct 2021 05:10 PM

அஸ்வின்-மோர்கன் மோதலில் தினேஷ் கார்த்திக்தான் மிகப்பெரிய குற்றவாளி: சேவாக் விளாசல்

டெல்லி கேபிடல்ஸ் வீரர் அஸ்வினுக்கும், மோர்கனுக்கும் நடந்த வாக்குவாதத்தில் சமாதானப்படுத்திய தினேஷ் கார்த்திக் | படம் உதவி: ட்விட்டர்.

மும்பை

ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் அஸ்வினுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கனுக்கும் இடையே நடந்த வார்த்தை மோதலில் மிகப்பெரிய குற்றவாளி தினேஷ் கார்த்திக்தான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப் பந்த் எதிர்கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி ஃபீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப் பந்த்தின் உடலில் பட்டுச் சென்றது.

இதைப் பார்த்த அஸ்வின் 2-வது ரன் ஓடினார். பொதுவாக ஃபீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கப்படும் மரபாகும். விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது. மன்கட் அவுட் செய்யும் முன் நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை செய்வது மரபாகும்.

ஆனால், விதிமுறையில் எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், மரபைச் சில வீரர்கள் கடைப்பிடிக்கிறார்கள், பலர் கடைப்பிடிப்பதில்லை.

டிம் சவுதி வீசிய 20 ஓவர்களின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அஸ்வின் வெளியேறும்போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறினார். அதற்கு அஸ்வின் பதிலுக்கு ஏதோ கூற வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைப் பார்த்த கேப்டன் மோர்கன் வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்தார். இருவரையும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நடுவர்கள் சமாதானம் செய்தனர்.

மோர்கன், அஸ்வின் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து தினேஷ் கார்த்திக் போட்டி முடிந்தபின் பேட்டி அளித்து ஏன் மோதல் நடந்தது எனக் கூறி விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்துக்குப் பின் சமூக வலைதளத்தில் மோர்கன், அஸ்வின் குறித்த பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சேவாக், சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் இந்தச் சம்பவம் பெரிதானதற்கு காரணம் தினேஷ் கார்த்திக் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

சேவாக் கூறுகையில், ''அஸ்வின், மோர்கன் மோதல் பெரிதான விவகாரத்தில் மிகப்பெரிய குற்றவாளி தினேஷ் கார்த்திக்தான். மோர்கன் என்ன பேசினார் என்பதை தினேஷ்க் கார்த்திக் கூறாமல் இருந்திருந்தால் இது இவ்வளவு பெரிய சர்ச்சையாக உருவாகியிருக்காது.

கிரிக்கெட்டில் இதுபோன்ற வாக்குவாதம் இயல்பானது. விளையாட்டில் இது நடக்கும் என்று கடந்து செல்ல வேண்டும் என தினேஷ் கார்த்திக் பேசியிருக்க வேண்டும். யாரோ ஒருவர் சிந்தித்ததற்கும் என்ன விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x