Last Updated : 24 Mar, 2016 09:31 AM

 

Published : 24 Mar 2016 09:31 AM
Last Updated : 24 Mar 2016 09:31 AM

அரையிறுதிக்கு முன்னேற எங்களுக்கு தகுதி இல்லை: பாகிஸ்தான் பயிற்சியாளர் வேதனை

நாங்கள் விளையாடும் விதத்தை வைத்துப் பார்க்கும்போது அரை யிறுதிக்குத் தகுதி பெறத் தகுதி யானவர்கள் அல்ல என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் வாக்கர் யூனிஸ் தெரிவித்தார்.

டி 20 உலகக் கோப்பையில் நேற்று முன்தினம் நியூஸிலாந்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஏற்கெனவே இந்திய அணியிடமும் தோல்வியை சந்தித்திருந்ததால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்தது.

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 181 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு 25 பந்தில் 47 ரன் விளாசி ஷர்ஜீல்கான் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தார். ஆனால் ஷெஸாத் (32 பந்தில் 30 ரன்), உமர் அக்மல் (26 பந்தில் 26 ரன்) ஆகியோர் பந்துகளுக்கு நிகராகவே ரன்கள் சேர்த்து ரன்குவிப்பு வேகத்தை மந்தமாக்கினர். தோல்விக்கு இவர்களது பொறுப்பில்லாத ஆட்டமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் வாக்கர் யூனிஸ் கூறியதாவது:

8-வது ஓவர் முதல் 15-வது ஓவர் வரை ரன்ரேட் உயரவே இல்லை. இளைஞர்கள் என்று சொல்லக்கூடிய வளரும் வீரர்கள் இருவர், நடு ஓவர்களில் நீண்ட நேரம் ஆடிவிட்டார்கள். ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்பினோம். ஆனால் அவர்கள் சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைக்க தவறினர்.

நியூஸிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நடுஓவர்களில் நாங்கள் பவுண்டரி எல்லைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இது மிகவும் முக்கியமானது. எளிதாக கூறுவதென்றால் போதுமான அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை.

பேட்ஸ்மேன்கள் செய்த தவறை மீண்டும் செய்கின்றனர். டி 20 போட் டியில் நிலைமைக்கு ஏற்றவாறு ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சரியான நிலையில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குறைகூறியவர்கள், வாய்ப்பு கிடைத்தபோது அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. வீரர்கள் தேர்வில் வாரியமும், தேர்வுக்குழுவினரும் கவனம் செலுத்த வேண்டும்.

இரண்டு ஆட்டத்தில் தோல்வி யடைந்த நிலையிலும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் நாங்கள் துரதிருஷ்டவசமாக விளையாடி வருகிறோம். நாங்கள் விளையாடும் விதத்தை வைத்துப் பார்க்கும்போது நாங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெறத் தகுதியானவர்கள் அல்ல.

இவ்வாறு வாக்கர் யூனிஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x