

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நாக்பூரில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டதில், நியூஸிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. நியூஸி. அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய வீரர்கள் அணிக்கு தோல்வி தேடித் தந்தனர். 127 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி முதல் ஓவரிலேயே நாதன் மெக்கல்லம்மின் சுழலுக்கு தவானை (1 ரன்) இழந்தது. 3-வது ஓவரை வீசிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாண்டனர், அதே ஓவரில் ரோஹித் சர்மா (5 ரன்கள்), ரெய்னா (1 ரன்) இருவரையும் வெளியேற்றினார். தொடர்ந்து யுவராஜ் சிங் (4 ரன்கள்) மெக்கல்லம் பந்தில் பெவிலியன் திரும்ப பேட்டிங்கில் சற்று நம்பிக்கை அளித்த விராட் கோலியும் (23 ரன்கள்) சோதியின் லெக்பிரேக் பந்துவீச்சுக்கு வீழ்ந்தார். தொடர்ந்து பாண்டியா (1 ரன்), ஜடேஜா (0), அஸ்வின் (10) என ஆட்டமிழக்க நியூஸிலாந்து நிர்ணயித்த இலக்கு கைமீறிச் சென்றது. அதிரடியாக ஆட முயன்ற தோனியும் 26 ரன்களுக்கு சாண்டனரின் சுழலில் 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார். முடிவில் 18.1 ஓவரில் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது. நியூஸி.யின் சுழற்பந்துவீச்சாளர் சாண்டனர், 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 11 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.