Published : 28 Sep 2021 01:42 PM
Last Updated : 28 Sep 2021 01:42 PM

எதற்காக உலகக் கோப்பைக்கு சஹலைத் தேர்வு செய்யவில்லை? தேர்வுக் குழுவினர் விளக்கம் அளியுங்கள்: சேவாக் கேள்வி

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹலைத் தேர்வு செய்யாததற்கு தேர்வுக் குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சஹல் தேர்வு செய்யப்படவில்லை.

மாறாக, இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடிய ராகுல் சஹரை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்திருந்தனர். கடந்த ஓராண்டாக யஜுவேந்திர சஹல் ஃபார்மில் இல்லாததால் அவரைத் தேர்வு செய்யவில்லை என்று தேர்வுக் குழுவினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் யஜுவேந்திர சஹல் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குயின்டன் டீ காக், இஷான் கிஷன், பும்ரா ஆகியோரின் விக்கெட்டை சஹல் வீழ்த்தினார்.

கடந்த 3 போட்டிகளில் ஆர்சிபி அணியில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருவதும் யஜுவேந்திர சஹல்தான். ஒவ்வொரு போட்டியிலும் சஹலின் ஆட்டம் மெருகேறி வரும் நிலையில் அவரை 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக்கும் சஹல் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நீக்கப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இணையதளம் ஒன்றுக்கு சேவாக் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''இந்திய டி20 அணியின் சொத்தாக சஹல் இருக்கும்போது, அவரை உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யாதது குறித்து தேர்வுக் குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த காலங்களிலும் சஹல் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார்.

அப்படியிருக்கும்போது, எதற்காக உலகக் கோப்பைக்கான அணியில் சஹலைத் தேர்வு செய்யாமல் தேர்வுக் குழுவினர் நிராகரித்தனர் எனத் தெரியவில்லை. சஹல் நிராகரிக்கப்பட்டதற்கு தேர்வுக் குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும். இலங்கையில் ராகுல் சஹர் பந்து வீசியது போன்று யஜுவேந்திர சஹல் இல்லை. சஹல் பந்துவீச்சு டி20 போட்டிக்குச் சொத்தாக இருக்கும்.

டி20 போட்டிக்கு எவ்வாறு பந்துவீச வேண்டும், எப்படி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பது சஹலுக்குத் தெரியும். மேக்ஸ்வெல், சஹல் மூலம்தான் மும்பை அணிக்கு எதிராக வெற்றி கிடைத்தது. நடுவரிசை வீரர்களை இருவரும் வெளியேற்றியதுதான் ஆட்டத்துக்கு திருப்புமுனை''.

இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x