Last Updated : 27 Sep, 2021 08:18 AM

 

Published : 27 Sep 2021 08:18 AM
Last Updated : 27 Sep 2021 08:18 AM

ப்ளே ஆஃப் செல்லுமா ரோஹித் படை? மும்பையை நசுக்கியது ஆர்சிபி:  ஹர்ஸல் ஹாட்ரிக்: மேக்ஸ்வெலுக்கு ரூ.14 கோடி 'வொர்த்' 

ஆர்சிபி ஸ்கோர் உயர்வுக்கு காரணாக அமைந்த கேப்டன் கோலி, மேக்ஸ்வெல் கூட்டணி | படம் உதவி ட்விட்டர்

துபாய் 


மேக்ஸ்வெல், கோலியின் அபாரமான அரைசதம், ஹர்ஸல் படேலின் ஹாட்ரிக், ஃபார்முக்குத் திரும்பிய யஜுவேந்திர சஹல் ஆகியோரால், துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் நசுக்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி18.1ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்து 54 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 6 வெற்றிகள், 4 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் நீடிக்கிறது. இன்னும் இரு வெற்றிகள் இருந்தாலே ப்ளேஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும்.

மும்பை கவலைக்கிடம்

ஆனால், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலைமைதான் கவலைக்கிடமாக இருக்கிறது. ஐபிஎல் சீசன் 2-வது பகுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி சந்திக்கும் 3-வது தோல்வி இதுவாகும். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் 6 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்துவரும் 4 போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியும் இல்லாவிட்டால் இந்த முறை ப்ளே ஆஃப் செல்லாமல் நடப்பு சாம்பியன் வெளியேறியது என்ற அவமானத்துடன் செல்ல வேண்டியது இருக்கும்.

தேர்வு சரியானதா

மும்பை இந்தியன்ஸ் இடம் பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் இருவருமே டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். ஆனால், இதுவரை ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர்கூடஐபிஎல் தொடரில் வீசவில்லை, பேட்டிங்கிலும ஃபார்மில் இல்லை. அப்படியிருக்கும் போது எந்த அடிப்படையில் அவரை அணியில் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தார்கள் எனத் தெரியவில்லை.

கடந்த ஐபிஎல் சீசனிலும், முதல்சுற்றிலும் சிறப்பாக பேட் செய்தார் என்பதற்காக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், டி20 உலகக் கோப்பைக்கு தேர்வான பின் இஷான் கிஷன் இந்த சீசனில் 9 போட்டிகளில் மொத்தம் 100 ரன்கள் மட்டுமே சேர்ததுள்ளார். அவர் மட்டுமல்ல, சூர்யகுமார் யாதவும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இந்த மூன்றுபேரின் தேர்வு சரியானதுதானா என்ற கேள்வி எழுகிறது.

ரோஹித்-கோலி

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது சரியான முடிவா என்று கோலி தனது கேப்டன்ஷிப்பால் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்சிபி ப்ளே ஆஃப் சென்றுவிடும், ஆனால் இந்தியடி20 அணிக்கு கேப்டனாக வர இருக்கும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ப்ளேஆஃப் செல்லுமா என ரோஹித்தின் கேப்டன்ஷிப்புக்கு கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.

4-வது இடத்துக்கு போட்டி

ஐபிஎல் தொடரில் தற்போது முதல் 3 இடங்களுக்கான இடங்கள் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 4-வது இடத்துக்குத்தான் கடுமையான போட்டி நிலவுகிறது. தற்போது 8 புள்ளிகளுடன் 4 அணிகள் இருப்பதால் 4-வது இடத்தை எந்த அணி நிரப்பும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் அடுத்துவரும் ஆட்டங்கள் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும்.

வெற்றிக்கு காரணம்

ஆர்சிபியின் வெற்றிக்கு இருவரை முக்கியக் காரணமாகக் குறிப்பிட வேண்டும். ஒருவர் மேக்ஸ்வெல், மற்றொருவர் ஹர்ஸல் படேல். ஐபிஎல் ஏலத்தில் ரூ.14.50 கோடி கொடுத்து வாங்கிய மேக்ஸ்வெல் நேற்று தன்னை விலை கொடுத்து வாங்கியது சரியானது என நிரூபித்தார்.

37 பந்துகளி்ல் 56 ரன்கள் சேர்த்து(3சிக்ஸர், 6பவுண்டரி) மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார், பந்துவீச்சிலும் பட்டைய கிளப்பிய மேக்ஸ்வெல், 4ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஹர்ஸல் படேல் 17-வது ஓவரை வீசி ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.அதிலும் ஹர்திக் பாண்டிாய, பொலார்ட் ஆகிய இரு மிகப்பெரிய வி்க்கெட்டுகளை வீழ்த்தி ஹர்ஸல் வெற்றிக்கு துணையாகினார். 3.1 ஓவர்கள் வீசிய ஹர்ஸல் படேல் 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 10 டாட் பந்துகள் அடங்கும்.

சஹல் அசத்தல்

என்னை ஏன் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது சரியா எனக் கேள்வி எழுப்பும் வகையில் சஹல் நேற்று அற்புதமாக பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசி ஒருமெய்டன் 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதில் 16 டாட் பந்துகள் அடங்கும்.

அதுமட்டுமல்லாமல் முகமது சிராஜ் தனதுவேகப்பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை மிரட்டிவிட்டார். 3 ஓவர்கள் வீசிய சிராஜ் 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இதில் 12 டாட் பந்துகள் அடங்கும். ஏறக்குறைய 2 ஓவர்களை மெய்டனாகவே சிராஜ் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஆர்சிபி அணிக்கு பந்துவீச்சாளர்கள் பெற்றுக்கொடுத்த அற்புதமான வெற்றியாக அமைந்தது.

கோலி, மேக்ஸ்வெல்

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் கோலி(51) 2-வது முறையாக தொடர்ந்து அரைசதம் அடித்து தனது ஃபார்முக்கு திரும்பி வருகிறார். மேக்ஸ்வெல் கடந்த இரு போட்டிகளாக ஷாட்களுக்கு சரியான டைமிங் கிடைக்காமல் தடுமாறி வந்தார், ஆனால், இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் என வகை, வகையான ஷாட்களை ஆடி தனது பழைய ஃபார்மை வெளிப்படுத்தினார்.

3-வது இடத்துக்கு பரிசோதனை

தேவ்தத் படிக்கல் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தவுடன் ஆர்சிபி மீண்டும் தடுமாறுகிறதோ என்று நினைக்கையில் 3-வது வீரராக வந்த பரத்துடன் சேர்ந்து கோலி 68 ரன்கள் சேர்த்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். 3 சிக்ஸர்,3 பவுண்டரி உள்பட 51 ரன்கள் சேர்த்து கோலி ஆட்டமிழந்தார்.

கோலியை ஆட்டமிழக்கச் செய்ய இரு வாய்ப்புகள் கிடைத்தும் அதை மும்பை இந்தியன்ஸ் அணியினர் தவறவிட்டனர். கோலி ரன் ஏதும் சேர்க்காத நிலையில் ராகுல் சஹர் கேட்சை கோட்டைவிட்டார், கோலி 37 ரன்னில் இருந்தபோது, ஹர்திக் பாண்டியா ஒரு கேட்சை தவறவிட்டார்.

3-வது இடத்துக்கு இதுவரை ஆர்சிபி அணி பட்டிதார், ஷான்பாஸ் அகமது என பலரையும் முயற்சி்த்துபார்த்து தோல்வியில்முடிந்தது, ஆனால், பரத் ஓரளவுக்கு நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார்.

ரூ14 கோடி வொர்த்

கடந்த போட்டிகளில் எல்லாம் ஆர்சிபியின் நடுவரிசை சொதப்பியதால் மேக்ஸ்வெல் என்ன செய்யப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் ஆர்சிபி ரன்ரேட்டை மின்னல் வேகத்துக்கு நகர்த்தினார். ஆர்சிபி ரன்ரேட் சென்ற வேகத்தைப் பார்த்தபோது, ஸ்கோர் 180 ரன்களைக் கடக்கும் என கணக்கிடப்பட்டது.

ஆனால், மேக்ஸ்வெல் 56 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 11 ரன்னிலும் அடுத்தடுத்து பும்ரா பந்துவீச்சில் வெளியேறியது ஆர்சிபி ரன்ரேட்டைக் கட்டிப்போட்டது. டிவில்லியர்ஸ் தொடர்ந்து 3-வது போட்டியிலும் சொதப்பியுள்ளார், ஆனால், மிகப்பெரிய இன்னிங்ஸ் ஏபிடியிடம் காத்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

20 ஓவர்களில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்து. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மும்பை சொதப்பல்

166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியைப் பொறுத்தவரை நடுவரிசை பேட்டிங் மிகவும் கவலைக்குரியதாக இந்தசீசனில் அமைந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்க்காததால் பலவீனம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டாலும் அவரைச் சேர்த்தபின்பும் அணியின் நடுவரிசை பேட்டிங் சொதப்புகிறது.

இந்த ஆட்டத்தில் தொடக்க வரிசையில் இறங்கிய ரோஹித் சர்மா(41), டீகாக் (24) இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர். இவர்கள் இருக்கும்வரை ரன்ரேட் ஓரளவுக்கு சுமாராகச் சென்றது. ஆனால், ரோஹித், டீகாக் ஆட்டமிழந்தபின் நம்பிக்கையற்று பேட்ஸ்மேன்கள் பேட் செய்தனர்.

விக்கெட் வீழ்ச்சி

சஹல், மேக்ஸ்வெல், இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியாத அளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதிலும் சஹல் பந்துவீச்சில் வழக்கத்துக்கு மாறாக பந்தை உயரத்தில்தூக்கி வீசி டாஸ் செய்வது அதிகரி்த்துள்ளது. இதுபோன்ற பந்துவீசும்போது பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட ஆசைப்பட்டு விக்கெட்டை இழப்பார்கள். ஜாம்பான்கள் வார்ன், முரளிதரன் பந்துகளில் இதுபோன்று டாஸ்செய்தல் அதிகமாக இருக்கும். மற்ற 9 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 79 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்த மும்பை அணி அடுத்த 32 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இழந்தது.

ஒற்றை இலக்க ரன்

இஷான் கிஷன்(9) சூர்யகுமார் (8) குர்னல் பாண்டியா(5) என ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து சொதப்பினர். ஹர்ஸல் படேல் வீசிய 17-வது ஓவரின் முதல்பந்தில் ஹர்திக் பாண்டியா(3) கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தபந்தில் பொலார்ட்(7) க்ளீன் போல்டாகினார், 3-வது பந்தில் ராகுல்சஹர்(0) கால்காப்பில் வாங்கி வெளியேறி ஹர்ஸல் படேலுக்கு ஹாட்ரிக் விக்கெட்டுக்கு வழிவகுத்தனர். அதன்பின் வந்த பும்ரா(5), மில்னே(0) ஆட்டமிழந்தனர். 18.1ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 111 ஓவர்களில் ஆட்டமிழந்து மோசமான தோல்வியைச் சந்தித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x