Published : 12 Mar 2016 09:52 AM
Last Updated : 12 Mar 2016 09:52 AM

செய்தித்துளிகள்: ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ல் தொடக்கம்

ஐபிஎல் டி 20 தொடரின் 9வது சீசன் ஏப்ரல் 9-ம்தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், தோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன.

51 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் இறுதி ஆட்டமும் மும்பையிலேயே நடக்கிறது. இறுதிப்போட்டியையும் சேர்த்து மொத்தம் 60 ஆட்டங்கள் மொகாலி, டெல்லி, மும்பை, நாக்பூர், புனே, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், ராய்ப்பூர் ஆகிய 10 நகரங்களில் நடைபெறுகிறது.

------------------------------------------

கல்லூரிகள் இடையிலான போட்டிகள்

செயின்ட் ஜோசப் கல்விக் குழுமம் சார்பில் ஜெட்ஸ் 2016 என்ற பெயரில் மாநில அளவிலான கல்லூரிகள் இடையிலான விளையாட்டுப் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது. ஆடவர் பிரிவு போட்டிகள் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியிலும், மகளிர் பிரிவு போட்டிகள் செயின்ட் ஜோசப் தொழில்நுட்ப கல்லூரியிலும் நடைபெறுகின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், செஸ், கால்பந்து உள்ளிட்ட ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.12.53 லட்சம் ஆகும்.

------------------------------------------

சந்தோஷ் டிராபி அரையிறுதியில் தமிழகம் தோல்வி

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நேற்று சர்வீசஸ்-கோவா அணிகள் மோதின. இதில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சர்வீசஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆட்டத்தின் 115வது நிமிடத்தில் கோவா வீரர் முகமது அலி ஷேம் சைடு கோல் அடித்தார். இதனால் சர்வீசஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதியில் தமிழகம்-மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதில் மகாராஷ்டிரா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டமும் ஷேம்சைடு கோலாகவே அமைந்தது. 58வது நிமிடத்தில் பிரேம் குமார் ஷேம் சைடு கோல் அடித்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது தமிழக அணி.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சர்வீசஸ்-மகாராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.

------------------------------------------

ஹோர்வாத்துடன் விஜேந்தர் இன்று மோதல்

தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் விளையாடி வரும் இந்தியாவின் விஜேந்தர் சிங் தனது 4வது ஆட்டத்தில் இன்று ஹங்கேரியை சேர்ந்த அலெக்ஸாண்டர் ஹோர்வாத்துடன் மோதுகிறார். இங்கிலாந்தின் லிவர்புல் நகரில் இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. கடந்த ஆண்டில் தான் பங்கேற்ற 3 ஆட்டங்களிலும் நாக் அவுட்டில் வெற்றி பெற்றிருந்த விஜேந்தர் 4வது வெற்றியை பெறும் முனைப்புடன் உள்ளார். ஹோர்வாத் இதுவரை மோதியுள்ள 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x