Published : 24 Sep 2021 04:36 PM
Last Updated : 24 Sep 2021 04:36 PM

பாகிஸ்தான் போகாதீங்க என்று ஈஸியா சொல்லிடலாம்; இந்தியாவுக்கு சொல்லமாட்டார்களே!- ஆஸி.வீரர் உஸ்மான் கவாஜா காட்டம்

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா | கோப்புப்படம்

மெல்போர்ன்

பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை என்று வீரர்களும், கிரிக்கெட் அமைப்புகளும் எளிதாகக் கூறிவிடலாம். ஏனென்றால், அது பாகிஸ்தான். ஆனால், இந்தியாவைப் பற்றிப் பேசவில்லையே என ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் ராவல் பிண்டி நகரில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஒருநாள் தொடர் தொடங்க இருந்தது. ஆனால், போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் திடீரென நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடரை ரத்து செய்தது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, இந்த முடிவை எடுத்திருப்பதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறிய அதே காரணத்தைக் கூறி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் நவம்பர், டிசம்பரில் மேற்கொள்ள இருந்த பாகிஸ்தான் பயணத்தையும் ரத்து செய்தது. பாதுகாப்புக் காரணங்களைக் கூறி நியூஸிலாந்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் தொடரை ரத்து செய்தது பாகிஸ்தான் வாரியத்துக்குப் பெரும் நெருக்கடியையும், நிதிரீதியாகப் பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரரும், பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவருமான உஸ்மான் கவாஜா கிரிக்இன்போ இணையதளத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் தொடரை சமீபத்தில் நியூஸிலாந்து, இங்கிலாந்து வாரியம் ரத்து செய்தது குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நியூஸிலாந்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் பாகிஸ்தான் தொடரை ரத்து செய்ததில் நிதிரீதியான காரணங்கள்கூட இருக்கலாம். ஆனால், எனக்கு பாகிஸ்தானுக்குப் பயணம் செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. அங்குதான் பிறந்தேன். ஆஷஸ் தொடருக்குப் பின் ஆஸ்திரேலிய அணியும் பாகிஸ்தான் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது.

நான் நினைப்பது என்னவென்றால், பாகிஸ்தானுக்குச் செல்லாதீர்கள் என வீரர்களும், கிரிக்கெட் அமைப்புகளும் எளிதாகக் கூறிவிடுகிறார்கள். ஏனென்றால், அது பாகிஸ்தான்.

மற்ற நாடுகளுக்கும் இந்தக் காரணத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டும். பாகிஸ்தானில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல், வங்கதேசத்தில் இருந்தால் யாரும் தொடரை ரத்து செய்வதில்லை. இந்தியாவில் இதுபோன்ற அச்சுறுத்தல் இருந்தால், பயணம் செய்ய யாரும் வேண்டாம் எனக் கூறுவதில்லை.

பணம்தான் பேசுகிறது. அது நாம் அனைவருக்கும் தெரியும். அதுதான் மிகப்பெரிய பங்கும் வகிக்கிறது. பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடலாம், பாதுகாப்பானது என ஒவ்வொரு முறையும் அவர்கள் கிரிக்கெட் தொடரை நடத்தி நிரூபித்து வருகிறார்கள். ஆனால், பாகிஸ்தானில் தொடரை ரத்து செய்தமைக்கு எந்தக் காரணமும் இருக்க முடியாது என நான் நினைக்கிறேன்.

ஏராளமான பாதுகாப்பு வசதிகள், ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனிப் பாதுகாப்பு எனக் கடும் பாதுகாப்பு இருக்கிறது. இதுவரை எந்த வீரும் பாதுகாப்பின்மையாக உணர்வதாக எந்தத் தகவலும் நான் கேட்டதில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் விளையாடும்போதுகூட சர்வதேச வீரர்கள்கூட பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாகக் கூறவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட, 100 சதவீதம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்''.

இவ்வாறு கவாஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x